இரும்பு, சிமென்ட் ஆகியவற்றின் கடும் விலை உயர்வால் பொதுமக்களின் வீடு கட்டும் கனவு கானல் நீராகும் நிலை உருவாகியுள்ளதாகவும், அனைத்துக் கட்டுமானப் பணிகளும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அகில இந்தியக் கட்டுநர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
அகில இந்தியக் கட்டுநர் சங்கத்தின் திருச்சி மையத்தின் தலைவர் ஆர்.சரவணன், செயலாளர் ஆர்.சுப்பிரமணி, துணைத் தலைவர் ஜி.ஜோதி மகாலிங்கம், செயற்குழு உறுப்பினர் பி.ரமேஷ்பாபு உள்ளிட்டோர் திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது:
''கரோனா ஊரடங்கால் அனைத்துக் கட்டுமானப் பணிகளும் முடங்கின. பின்னர், கரோனா தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கின. இதனிடையே, 2020 நவ.14 முதல் 2021, ஜன.14 வரையிலான 2 மாத காலத்தில் மட்டும் இரும்பு விலை 40 சதவீதமும், சிமென்ட் விலை 30 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளன.
இரும்புப் பொருட்கள் அனைத்துத் தரப்பினருக்கும் கிலோ ரூ.45-லிருந்து ரூ.70 வரை உயர்ந்து, தற்போது ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிமென்ட் விலை சில்லறை விலையில் ரூ.380-ல் இருந்து உயர்ந்து தற்போது ரூ.440-க்கும், அரசு கட்டுமானங்களுக்கு ரூ.320-ல் இருந்து ரூ.390-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விலை உயர்வு உற்பத்தியாளர்களால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பொதுமக்களின் வீடு கட்டும் கனவு நிறைவேறாமல் கானல் நீராகும் நிலை உருவாகியுள்ளது. அனைவருக்கும் வீடு என்ற திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது.
அரசு கட்டுமானப் பணி ஒப்பந்ததாரர்களுக்கு ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில், ஒப்பந்தத்துக்குப் பிறகு உயர்த்தப்பட்ட விலைக்கான தொகையை அந்தந்த மாநில அரசுகள் வழங்கிய நிலையில், தமிழ்நாட்டில் இல்லை. இதனால், அரசுக் கட்டுமானப் பணிகளில் தொய்வு நேரிட்டு, கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கட்டுமானப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலகில் எந்த நாட்டிலும் இரும்பு, சிமென்ட் விலை உயர்த்தப்படாத நிலையில், இந்தியாவில் மட்டும் அனைத்துத் தரப்பு மக்களையும் அச்சப்படுத்தும் வகையில் விலை உயர்ந்துள்ளது.
எனவே, பொதுமக்கள், கட்டுநர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரத்தை பாதிக்கச் செய்யும் இரும்பு, சிமென்ட் ஆகியவற்றின் விலை உயர்வைக் கண்டித்தும் மற்றும் இரும்பு, சிமென்ட் ஆகியவற்றின் விலை உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரும்பு, சிமென்ட் விலையை நிர்ணயம் செய்ய ஒழுங்குமுறை ஆணையத்தை மத்திய, மாநில அரசுகள் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் அகில இந்தியக் கட்டுநர் சங்கம் சார்பில் நாளை (பிப்.12) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்''.
இவ்வாறு அகில இந்தியக் கட்டுநர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
செய்தியாளர் சந்திப்பின்போது சங்கத்தின் பொருளாளர் ராமுசுரேஷ், முன்னாள் துணைத் தலைவர் எம்.திரிசங்கு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.