தமிழக அறநிலைத்துறைக்கு சொந்தமான கோயில்களின் நிலங்களில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றி கோயில் கணக்கில் சேர்க்கப்படும் என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
கோவில்பட்டியில் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களுக்கு உட்பட்ட நிலங்களில் தனியார் ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றி கோயில் கணக்கில் சேர்க்கப்படும்.
தமிழக முதல்வரால் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் திருச்செந்தூரில் ரூ.28 கோடியில் யாத்திரிகர் நிவாஸ் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, மதிப்பீடு அங்கீகரிக்கப்பட்டு, ஒப்பந்தம் விட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே உள்ள அறைகள் பழுதடைந்த நிலையில் தங்குவதற்கு ஏற்ற நிலையில் இல்லாததால் அவை பக்தர்களுக்கு வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களின் பிரசாதம் தபால் மூலமாக பக்தர்கள் பெறுவதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட சிதிலமடைந்த 12 ஆயிரம் கோயில்கள் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோயில் வெளிப்பிரகாரத்தில் தற்காலிகமாக கூடாரம் கட்டப்பட்டுள்ளது. அங்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு தமிழக முதல்வரின் உத்தரவு பெற்று ஒப்பந்த விடப்பட்டு விரைவாக பணிகள் தொடங்கப்படும்'', என்றார். பேட்டியின்போது, அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனிருந்தார்.