தமிழகம்

நொளம்பூர் மழைநீர் கால்வாயில் விழுந்து தாய் மகள் பலியான விவகாரம்: நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை நொளம்பூரில் இருசக்கர வாகனத்தில் வந்த தாய், மகள் இருவரும் மூடப்படாத மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்ததில் உயிரிழந்தனர். அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரிய வழக்கில் நெடுஞ்சாலைத்துறை ஆணையம் 4 வாரத்தில் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நொளம்பூர் அருகில் மதுரவாயல் புறவழிச்சாலை ஓரம் மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகாலில் விழுந்து, தனியார் கல்லூரி பேராசிரியர் கரோலின் பிரெசில்லா மற்றும் அவரது மகள் இவாலின் ஆகியோர் பலியாகினர்.

சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்தில் உயிரிழந்த கரோலின் குடும்பத்தில் எஞ்சியுள்ள கடைசி மகளை அரசு காக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்திருந்தார்.

முதல்வர் தலா 2 லட்சம் இழப்பீடு அறிவித்திருந்தார். அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிர் பறிபோனதற்கு தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்த மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த விபத்து குறித்து உயர் நீதிமன்றமும் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து இழப்பீடு குறித்து நெடுஞ்சாலைத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த விபத்து சம்பவத்தை அடுத்து, மழைநீர் வடிகாலை மூடாமல் அஜாக்கிரதையாக செயல்பட்ட பொதுப்பணித்துறை, மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்த இருவருக்கும் கூடுதல் இழப்பீடு வழங்கவும் கோரியும் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு புதிதாக புகார் மனு அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்தியது.

அந்த புகார் மனுவை நான்கு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT