கிரண்பேடி: கோப்புப்படம் 
தமிழகம்

திறப்பு விழா அழைப்பிதழில் பெயரில்லை: விழாவை தள்ளி வைத்து உத்தரவிட்ட கிரண்பேடி

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி நகராட்சி அலுவலக புதிய கட்டிடத் திறப்பு விழா அழைப்பிதழில் தனது பெயர் இல்லாததால், விழாவை தள்ளி வைத்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். திட்ட இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி அருணுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

புதுச்சேரி கடற்கரை சாலையில் இருந்த நகராட்சி அலுவலகமான மேரி கட்டிடம் பராமரிப்பு பணியின்போது பல ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதைத்தொடர்ந்து, புதிய கட்டிடம் ரூ.14 கோடி செலவில் கட்டப்பட்டு நாளை (12-ம் தேதி) மாலை 6 மணியளவில் திறப்பு விழா நடைபெற உள்ளது.

இதில், முதல்வர், அமைச்சர்கள், எம்.பி-க்கள், தொகுதி எம்எல்ஏ, அரசு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்கான அழைப்பிதழை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் இன்று (பிப். 11) பதிவிட்டு கூறியிருப்பதாவது:

"இந்த திட்டம் 100 சதவீதம் மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த அழைப்பிதழில் எனது (துணைநிலை ஆளுநர்) பெயர் இடம் பெறவில்லை.

இது தொடர்பாக, ஐஏஎஸ் அதிகாரியான திட்ட இயக்குநர் அருண் ஏன் எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை. தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் இது தொடர்பாக அருணிடம் விளக்கம் கேட்டுள்ளார். அவர் அளிக்கும் பதிலின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும். ஒருவேளை அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் மத்திய உள்துறையில் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், திட்ட இயக்குநர் அருணுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அருணின் பதில் வந்த பிறகு அவர் மீது நான் (துணைநிலை ஆளுநர்) நடவடிக்கை எடுப்பேன்" என்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து இதுபற்றி பல்வேறு உத்தரவுகளை அதிகாரிகளுக்கு பிறப்பித்த துணைநிலை ஆளுநர் மதியத்தில் புதிய உத்தரவை பிறப்பித்தார்.

அதில், "நகராட்சி மேரி கட்டிடம் சீரமைப்புக்கு மத்திய அரசு முழு நிதியுதவி தந்தது. குறிப்பாக, கரையோர பேரிடர் அபாயக்குறைப்பு திட்டத்தில் ரூ.14 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு ரூ.244 கோடி கடனையும் கரையோர பேரிடர் அபாயக்குறைப்பு திட்டத்துக்கு அளித்துள்ளது. இதனால் இக்கட்டிடத்திறப்புக்கு மத்திய அரசிலிருந்து பிரமுகர்களை திறப்பு விழாவுக்கு அழைத்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை தொடர்பு கொண்டு பொருத்தமான தேதியை தலைமைச்செயலாளர் நிர்ணயிக்க வேண்டும்.

அதனால் 12-ம் தேதி நடக்கவிருந்த திறப்பு விழா ஒத்திவைக்கப்படுகிறது. எதிர்காலத்தில் மத்திய அரசால் நிதி தரப்பட்ட திட்டங்கள், பணிகளை திறக்க மத்திய அரசின் பிரதிநிதிகளை அழைக்க வேண்டும். இதுபற்றி அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை தரப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT