தமிழகம்

2-வது நாளாக தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: ஐடி, ஆர்பிஐ, சுங்கத்துறை, டிஜிபி உள்ளிட்டோருடன் ஆலோசனை

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், அரசு உயர் அதிகாரிகள், ஐடி, ஆர்பிஐ, சுங்கத்துறை, டிஜிபி உள்ளிட்ட முக்கிய துறைச் சார்ந்த அலுவலர்களுடன் இன்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனையை தொடர்ந்தார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் நடக்க வாய்ப்புள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையிலான தமிழக தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையம் இப்பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து தேர்தல் தேதி அறிவிப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் நேற்று காலை 11.15 மணி அளவில் சென்னை வந்தனர்.

தலைமை தேர்தல் ஆணையருடன் தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார், கூடுதல் தலைமை இயக்குநர் ஷேபாலி பி.சரண், பொதுச் செயலர் உமேஷ் சின்ஹா, துணை தேர்தல் ஆணையர் சந்திர பூஷன் குமார், இயக்குநர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, செயலர் மலேய் மாலிக் ஆகியோர் சென்னை வந்தனர்.

நேற்று பகல் 12.15 முதல் 2 மணி வரை தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை பிரதானமாக வைத்தனர்.

அரசு விளம்பரங்களை தேர்தலுக்கு ஆறு மாதம் முன்னரே நிறுத்துவது, 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு அளிப்பதை நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்தனர்.

இந்நிலையில் இன்றும் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனையை தொடர்ந்தார். இன்று காலையிலிருந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹுவுடன் இணைந்து தேர்தல் தொடர்பான ஒழுங்குமுறை நிறுவனங்களான வருமான வரித்துறை, ரிசர்வ வங்கி, சுங்க இலாகா, இந்திய விமான நிலையங்கள் ஆணையம், கடலோர காவல்படை, மத்திய ரிசர்வ் படை, பொருளாதார குற்றப்பிரிவு, வருவாய் புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை சார்ந்த உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் தொடர்ந்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட முக்கியத்துறை சார் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தக்கூட்டத்தில் தேர்தலை நடத்துவதில் உள்ள பிரச்சினைகள், கரோனா தொற்று பரவலை அடுத்து வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது, பணப்பட்டுவாடாவை தடுப்பது, வேட்பாளர் செலவீனம் கண்காணிப்பு, தேர்தல் விதிமீறல், தேர்தல் நடக்கும் நாள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனை முடிந்தப்பின் தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்தார்.

SCROLL FOR NEXT