தமிழகத்தில் கரோனா தொற்று ஊரடங்குக்குப்பின் முதன்முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். சென்னையில் மெட்ரோ தடத்தை தொடங்கி வைக்கிறார். சென்னையில் 3 மணி நேரம் மட்டுமே தங்க உள்ளார்.
பிரதமர் மோடி தமிழகத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க முதல்வர் பழனிசாமியின் அழைப்பின்பேரில் சென்னை வருகிறார். தமிழகத்தில் கரோனா தொற்று உருவாவதற்கு முன்னர் பிரதமர் மோடி சென்னை வந்தார். அதற்கு பின்னர் கடந்த 10 மாதங்களில் பிரதமர் மோடி சென்னை வரவில்லை.
தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான வழித்தடம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது. அதை தொடங்கிவைக்க வருமாறு முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். அதை ஏற்று பிரதமர் மோடி பிப்.14 அன்று சென்னை வருகிறார்.
சென்னை மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கும் அதே வேளையில் திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். சென்னை விமான நிலையம் மற்றும் திருச்சி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்கும், எண்ணூரில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துறைமுக முனையத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
மொத்தம் 3 மணி நேரம் மட்டுமே சென்னையில் செலவழிக்கும் பிரதமர் மோடி விழா முடிந்தவுடன் கொச்சி புறப்பட்டுச் செல்கிறார். காலை 7-50-க்கு டெல்லியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வரும் மோடி காலை 10-35-க்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை கப்பற்படை ஹெலிகாப்டர் தளத்துக்கு வரும் அவர் அங்கிருந்து கார் மூலம் நிகழ்ச்சி நடக்கும் நேரு ஸ்டேடியம் செல்கிறார். 11.15 மணியிலிருந்து 12.30 வரை சென்னை மெட்ரோ விம்கோ நகர் ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு நலப்பணிகளை தொடங்கி வைக்கிறார். பின்னர் ஓய்வெடுக்கும் அவர் 1-00 மணி க்கு ஹெலிகாப்டர் தளத்தை அடைகிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 1-30 மணிக்கு சென்னை விமான நிலையம் செல்லும் அவர் அங்கிருந்து கொச்சிக்கு புறப்பட்டுச் செல்கிறார். மொத்தமே 3 மணி நேரம் மட்டுமே சென்னையில் பிரதமர் செலவழிக்கிறார்.