தமிழகத்தில் வெள்ள நிவாரணத் துக்காக ஒதுக்கப்பட்ட நிதி போதாது என்றும் இன்னும் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதியில் வெள்ள பாதிப்பு களை பார்வையிட்ட முதல்வர் ஜெய லலிதா, ஒரே நாளில் 27 முதல் 33 செ.மீ. வரை மழை பெய்ததுதான் சென்னையில் ஏற்பட்ட சேதத்துக்கு காரணம் என்று கூறியுள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு 28 செ.மீ. மழை பெய்தபோதும் இப்படித்தான் கூறி னார். அப்படியென்றால், மழைநீர் வடிகால்வாய்க்காக கடந்த 10 ஆண்டுகளாக எந்தத் திட்டமும் செயல்படுத்தவில்லையா என்று கேட்கத் தோன்றுகிறது.
சென்னையில் மழைநீர் வடிகால் வாய்கள் கட்டுமானத்துக்காக சுமார் ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது என்ன ஆனது என்று தெரியவில்லை. தமிழகத் தில் மழையால் ரூ.5 ஆயிரம் கோடிக்குமேல் சேதம் ஏற்பட்டிருக் கும் என சொல்லப்படுகிறது. ஆனால், நிவாரண உதவிக்கும், மறு சீரமைப்புக்கும் ரூ.500 கோடி ஒதுக்கியது போதுமானதாக இருக்காது. அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.
ரூ. 5000 நிதி: ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: சென்னை புறநகர் பகுதிகளில் சிறிய ஏரிகள் உடைந்ததால் சென்னை அம்பத்தூர், கொரட்டூர், கொளத் தூர், வேளச்சேரி, மேடவாக்கம், பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகள் தனித்தீவுகளாக காட்சியளிக்கின்றன.
பேரிடர் ஏற்படும்போது அதை எதிர்கொள்வதற்கான குறைந்த பட்ச முன்னேற்பாடுகள் கூட இல்லாததுதான் இதற்கு காரணம்.
கூடுதலாக பெய்யும் மழை நீரை சேமித்து வைக்கும் கட் டமைப்புகளை கடந்த 50 ஆண்டு களில் ஏற்படுத்தப்படவில்லை.
தொடர் மழையால் தமிழகத் தில் லட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். எனவே, அவர்களின் குடும்பங் களுக்கு வாழ்வாதார உதவியாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நிதி: முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: அக்டோபர் முதல் 3 மாதங்களுக்கு பருவ மழை பெய்வதுடன் புயல் ஏற்படும் என்பதை உணர்ந்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுக்காத தால் இதுவரை 173 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக் கணக்கான கால்நடைகளும் பலியாகியுள்ளன. லட்சக்கணக் கான ஏக்கரில் பயிர்கள் அழிந்துள்ளன.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிப் பதுடன் மத்திய நிதியைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு கோரும் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கோரிக்கை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று அனுப்பிய கடிதம்:
கன மழையால் பல லட்சம் ஏக்கரில் சாகுபடிகள் முற்றாக அழிந்துள்ளன. கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது.
நெல், மரவள்ளி, அரும்பு போன்ற பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம், கரும்பு, வாழை, சவுக்கு, முந்திரி போன்ற பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம், மழைக்கு பலியான மாட்டுக்கு ரூ. 50 ஆயிரம், ஆட்டுக்கு ரூ. 10 ஆயிரம், முற்றிலும் அழிந்துபோன வீடுகளுக்கு ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு அரசே பிரிமியம் செலுத்தி பயிர்க் காப்பீடு செய்து இழப்பீடு பெற வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழிசை வலியுறுத்தல்
வெள்ள நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.