என் மீது போடப்படும் வழக்கு களைக் கண்டு அஞ்ச மாட்டேன் என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் தேனி, போடி, பெரியகுளம் பகுதிகளில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற வுடன் போடி கொட்டகுடி ஆற்றில் கொம்புதூக்கி அய்யனார் கோயில் அருகே தடுப்பணை கட்டப்படும்.
போடி பகுதி 18-ம் கால்வாய் திட்டம் மூலம் எல்லா கண்மாய்களுக்கும் நீர் நிரப்ப ஆவண செய்யப்படும். பொதுமக்கள் ஜெயலலிதாவைத்தான் முதல்வராகத் தேர்வு செய்தார்கள். ஆனால் அவர் மறைவுக்குப் பிறகு சசிகலா தயவில் பழனிசாமி முதல்வர் ஆகி விட்டார்.என் மீது போடப்படும் வழக்குகளைக் கண்டு பயப்பட மாட்டேன் என்று பேசினார்.
பிரச்சாரத்துக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். போடி முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் சங்கர், வழக்கறிஞர் ஜே.எம்.ஹச்.இம்ரான் ஆரூண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக பிரமுகர் நம்பிக்கை நாகராஜ், நகர் செயலர் செல்வராஜ், வடக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ராஜசேகர், பஷீர், ஐயப்பன் முன்னாள் நகர் செயலாளர் ராஜா ரமேஷ், இளைஞரணி நடராஜன், பாண்டியராஜன், ஷேக் அப்துல்லா, அப்துல் கரீம், வக்கீல் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, போடி தொகுதி தேர்தல் அலுவலகத்தை உதயநிதி திறந்து வைத்தார்.