தமிழகம்

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்

செய்திப்பிரிவு

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேலும் 5 தினங்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தெற்கு அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் தாக்கம் தமிழகத்தில் குறைந்துவிட்டது. அதே நேரத்தில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்று மேலடுக்கு சுழற்சியுடன் இணைந்து, தென்கிழக்கு வங்கக்கடலில் தற்போது நிலைகொண்டுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இது சனிக்கிழமை அன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 34 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. புழல், செங்குன்றம், அம்பத்தூரில் 21 செ.மீ. மழை பெய்துள்ளது.

கனமழை நீடிக்கும்

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும். இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யலாம். சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யும். தொடர் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.

கடற்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு ரமணன் தெரிவித்தார்.

பரவலாக மழை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, டெல்டா மாவட்டங்களின் சில பகுதிகள் மற்றும் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்தது. சென்னையில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை கனமழை பெய்தது. அதன் பிறகு விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

அதிகபட்ச மழை

இன்று காலை நிலவரப்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் 15 செ.மீ., மீனம்பாக்கத்தில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கு முன் கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி சென்னையில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதற்குப் பின், சென்னையில் ஒரே நாளில் பெய்த அதிகளவு மழை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டும் அக்டோபர் 1-ம் தேதி முதல் இன்று வரை சென்னையில் இயல்பை தாண்டி 67 செ.மீ. மழை பெய்துள்ளது. கடந்த 2 நாட்களில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பெய்த தொடர் மழையால், நீர்நிலைகள் நிரம்பியுள்ளதுடன், தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT