தமிழகம்

7-வது ஊதியக் குழு பரிந்துரையை எதிர்த்து போராட்டம்: தொமுச அறிவிப்பு

செய்திப்பிரிவு

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையை எதிர்த்து போராட இருப்பதாக தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையின் (தொமுச) பொதுச்செயலாளர் மு.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழு பரிந்துரைகள் அரசிடம் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 54 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலனடைகின்றனர். குறைந்தபட்ச ஊதியம் 2014 விலைவாசியை கணக்கிட்டு ரூ. 18 ஆயிரம் கூறப்பட்டுள்ளது. இது தற்போதைய விலைவாசியுடன் ஒப்பிடும் மிகக்குறைவானதாகும். அதுபோல வீட்டுவாடகை போன்ற படிகளும் போதிய அளவில் உயர்த்தப்படவில்லை.

உழைக்கும் தொழிலாளர்களை மேலும் சுரண்டவும், அதிகாரிகள் மேலும் வளமடையும் வகையிலும் 7-வது ஊதியக் குழு பரிந்துரைகள் அமைந்துள்ளன. ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள குறைபாடுகளை ஊழியர் தரப்பு பிரதிநிதிகளோடு பேசி தீர்வு காண வேண்டும். தொழிலாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ள 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை எதிர்த்து தொமுச தொடர் போராட்டங்களை நடத்தும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT