தமிழகத்தில் அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கோவில்பட்டியில் மறியலில் ஈடுபட்ட 197 அரசு ஊழியர்களை போலீஸார் கைது செய்தனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள் உள்ளிட்ட 3.5 லட்சத்துக்கு அதிகமான சிறப்புகால முறை ஊதியம், தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் மு.சுப்பிரமணியன் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட தற்காலிக பணிநீக்கத்தை ரத்து செய்து ஓய்வூதியப் பலன் கிடைக்க உத்தரவிட வேண்டும்.
தமிழக அரசுத்துறையில் காலியாக உள்ள 4.5 லட்சம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசுத்துறையில் ஒப்பந்தம், தினக்கூலி அவுட் சோர்சிங் முறைகளை தடுத்திட வேண்டும். அகவிலைப்படி, சரண் விடுப்பு, வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு உள்ளிட்ட கரோனா தொற்று காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கோவில்பட்டியில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் சின்னத்தம்பி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தை சேர்ந்த முனியாண்டி சாமி, அரசு ஊழியர் சங்க வட்ட செயலாள் உமாதேவி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வராஜ், சத்துணவு ஊழியர் சங்க வட்டாரச் செயலாளர் செல்லத்துரை ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை என்.வெங்கடேசன் மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், பயணியர் விடுதி முன்பிருந்து ஊர்வலமாக சென்று, இளையரசனேந்தல் சாலை விலக்கில் மறியலில் ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 162 பெண்கள் உட்பட 197 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களை தனியார் திருமண மண்டபத்தில் போலீஸார் தங்க வைத்தனர். அப்போது அரசு ஊழியர்கள் கொண்டு சென்ற தண்ணீர் பாட்டில் கூட போலீஸார் அனுமதிக்கவில்லை.
மேலும், திருமண மண்டபத்தின் ஜன்னல்களை அடைத்துள்ளனர். மதியம் ஒரு மணிக்கு கைது செய்யப்பட்டவர்கள் 3.30 மணி வரை தண்ணீர், உணவு உள்ளிட்ட எதுவும் வழங்கப்படவில்லை. தங்களை குற்றவாளிகளைப் போல் போலீஸார் நடத்தியதாக அரசு ஊழியர்கள் குற்றஞ்சாட்டினர்.