முதல்வர் பழனிசாமியின் சென்னை மற்றும் சேலம் இல்லங்களில் குண்டு வெடிக்கும் எனத் தொலைபேசியில் மிரட்டல் விடுத்த திருப்பூர் நபரை சைபர் பிரிவு போலீஸர் கைது செய்தனர்.
தமிழக முதல்வர் பழனிசாமி சேலம், எடப்பாடியைச் சேர்ந்தவர். சேலத்தில் அவருக்குச் சொந்தமாக வீடு உள்ளது. முதல்வர் என்கிற முறையில் சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் ஒதுக்கப்பட்டுள்ள இல்லத்தில் வசித்து வருகிறார்.
முதல்வர் பழனிசாமிக்குத் தமிழக காவல்துறை பாதுகாப்பு தவிர அவரது இல்லத்தில் கோர்செல் பிரிவு கண்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டு தனிப் பாதுகாப்பும் அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் செல்லும் இடங்களிலும் இப்பிரிவு போலீஸார் உடன் சென்று பாதுகாப்பு அளிப்பார்கள்.
இந்நிலையில் காவல் கட்டுப்பாட்டறை எண் 100-க்கு நேற்று ஒரு மர்ம நபரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை மற்றும் சேலத்தில் உள்ள வீடுகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், விரைவில் வெடித்துச் சிதறும் என்றும் சொல்லி மிரட்டல் விடுத்துவிட்டு போனை வைத்துவிட்டார்.
இதனால் அதிர்ந்துபோன போலீஸார் உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து முதல்வரின் சென்னை, சேலம் இல்லங்களுக்கு வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் போலீஸார் சென்று சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார், சைபர் கிரைம் போலீஸாரிடம் போன் செய்த நபரின் எண்ணை அளித்தனர்.
சைபர் பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொலைபேசி அழைப்பு, திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அடுத்த காமநாயக்கன் பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரடிவாவி பகுதியைச் சேர்ந்த மயில்சாமி என்பவருக்குச் சொந்தமான செல்போன் எண்ணிலிருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அங்கு சென்ற திருப்பூர் போலீஸார் மயில்சாமியைக் கைது செய்தனர்.
அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். என்ன காரணத்திற்காக மிரட்டல் விடுத்தார், சதி நோக்கம் எதுவும் உள்ளதா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா? அல்லது அரசியல் கோபத்தால் விடுக்கப்பட்ட வெற்று மிரட்டலா என்பது போலீஸார் விசாரணைக்குப் பின் தெரியவரும்.