தமிழகம்

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு: 8 மாதங்களாகியும் உடற்கூறு ஆய்வறிக்கை வரவில்லை; உறவினர்கள் புகார்

அ.அருள்தாசன்

சாத்தான்குளத்தில் போலீஸாரின் தாக்குதலில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் உயிரிழந்து 8 மாதங்கள் ஆகியும் உடற்கூறு ஆய்வு முடிவுகள் வழங்கப்படாதது குறித்து ஜெயராஜின் மகள் பெர்சி வேதனை தெரிவித்தார்.

ஆய்வு முடிவுகளை அளிக்குமாறு கேட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் இன்று (புதன்கிழமை) அவர் மனு அளித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் 19- ம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர்கள் இருவரின் பிரேதப் பரிசோதனைகள் 2020 ஜூன் 24-ம் தேதி நடைபெற்றது. மூன்று அரசு மருத்துவர்கள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

அப்பரிசோதனை முடிவுகள் சீலிட்ட உறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் பிரேதப் பரிசோதனை முடிவுகளின் அறிக்கைகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை. இந்த அறிக்கையைக் கேட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி முதல்வரிடம் ஜெயராஜின் மகள் பெர்சி இன்று மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

எனது சகோதரன் பென்னிக்ஸ் , தந்தை ஜெயராஜ் இருவரும் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களது உடற்கூறு ஆய்வு முடிந்து 8 மாதங்கள் கடந்து விட்டது. வழக்கு விசாரணை மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அடுத்த விசாரணை வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு உடற்கூறு ஆய்வு முடிவு அறிக்கை தேவைப்படுகிறது.

உடற்கூறு ஆய்வியல் துறையில் அறிக்கை குறித்து கேட்டால் முறையான பதில் தர மறுக்கிறார்கள். உடற்கூறு ஆய்வு அறிக்கை பெறுவதற்கான மனுவையே வாங்க மறுக்கிறார்கள் எனவே வேறு வழியின்றி உடற்கூறு ஆய்வறிக்கை கேட்டு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் மனு அளித்துள்ளோம்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக மருத்துவ கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். உடற்கூறு ஆய்வறிக்கை வழங்காவிட்டால் நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என்று தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜ், காவலர்கள் செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் , சாமதுரை உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் 2,027 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தற்போது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில் வரும் 18 ம் தேதி வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

SCROLL FOR NEXT