இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படாதது, ஒரு வாக்காளர் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் சேர்க்கப்பட்டிருப்பது போன்ற காரணங்களால் ஜனவரியில் வெளியிடப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலை ரத்து செய்து, திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடக்கோரிய வழக்கில் தலைமை தேர்தல் ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி சைலப்பா கல்யாண், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைவரும் வாக்காளிக்க வேண்டும் என்பதற்காக நோட்டா முறை அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் காரணமாக நூறு சதவீத வாக்குப்பதிவு நிறைவேறாமல் உள்ளது.
வாக்காளர்கள் பட்டியலில் உள்ள இறந்தவர்களின் பெயர்கள் சரியாக நீக்கப்படுவதில்லை. சில வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் வெவ்வேறு முகவரிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இப்பட்டியலிலும் இறந்தவர்கள் பெயர் நீக்கம், ஒரு வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருந்தல் ஆகிய குளறுபடிகள் சரி செய்யப்படவில்லை.
எனவே, தமிழகத்தில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்த ஜனவரியில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை ரத்து செய்து, இறந்தவர்களின் பெயர்களை நீக்கியும், இரு இடங்களில் பதிவான வாக்காளர்கள் பெயர்களை சரி செய்தும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர், தமிழக தேர்தல் அலுவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.