மழைக்கு பலியான 6 பேரின் குடும்பங்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தலா ரூ. 4 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 9-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெம்பகரை கிராமத்தைச் சேர்ந்த கோட்டீஸ்வரன், 12-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கருணாமூர்த்தி, திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள கான்பாளையத்தைச் சேர்ந் ஆத்மாராவ், காஞ்சிபுரம் மாவட்டம் அய்யம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மெளலிஸ்ரீ ஆகியோர் மழை காரணமாக உயிரிழந்துள்ளனர்.
13-ம் தேதி வேலூர் மாவட்டம் ஆற்காடு வட்டம் துர்க்கம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி, காஞ்சிபுரம் மாவட்டம் நத்தப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சின்னபையன் ஆகியோர் மழை காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த செய்தியறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கும் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தலா ரூ. 4 லட்சம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.