ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு பலமுறை அழைத்தும் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாதது ஏன் என திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக, ஆண்டிபட்டி பஸ் நிலையம் அருகே மகாராஜன் எம்எல்ஏ தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
திமுக ஆட்சியில் ரூ.400-க்கு விற்கப்பட்ட சமையல் கேஸ் சிலிண்டர் தற்போது மோடி ஆட்சியில் ரூ.800-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் பெட்ரோல், விலை டீசல் விலை உள்ளிட்ட அனைத்தும் உயர்த்தப் பட்டுள்ளன. தற்போது நீட் தேர்வைக் கொண்டு வந்து மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டி வருகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளில் 14 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
மோடியிடம் சிறந்த அடிமையாக இருப்பவர்கள் யாரென்று ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்குப் போட்டி வைத்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்று கூட சொல்ல முடியாத நிலை உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்தபோது அமெரிக்க நிறுவனத்தில் ரூ.7 கோடி லஞ்சம் பெற்றுள்ளார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓ.பன்னீர் செல்வம்தான் முதலில் கூறினார். ஆனால் விசாரணை ஆணையம் அவருக்கு பத்து முறை அழைப்பு கொடுத்தும், ஏன் இதுவரை ஆஜ ராகவில்லை.
டீக்கடை நடத்தி வந்த ஓ.பன்னீர் செல்வம் இன்றைக்கு ஊழலில் திளைத்து பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதியாக மாறி இருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு, கல்விக் கடன் ரத்து செய்யப்படும். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குழாய் மூலமாக ஆண்டிபட்டி பகுதிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு 14 கண்மாய்களும் 110 குளங்களும், 60 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்படும் வகையில் திட்டம் நிறைவேற்றப்படும் இவ்வாறு அவர் பேசினார். கன்னியப்பிள்ளைபட்டியில் சிறுவர்கள் உதயநிதியிடம் கிரிக்கெட் பேட் கேட்டு கோரிக்கை விடுத்தனர். உடனே அதற்கான ஏற்பாடுகளைச் செய்ததுடன் அவர்களுடன் செல்ஃபியும் எடுத்துக் கொண்டார்.