சமூக ஊடகங்களில் பாஜகவுக்கு எதிராக கருத்துகள் பதிவிட்டு வரும் 5 லட்சம் பேரை ஒருங்கிணைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் சமூக ஊடகத்துறை பிரச்சார இயக்கத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று தொடங்கிவைத்தார். அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:
மத்தியில் பாஜக அரசும், தமிழக அதிமுக அரசும் இணைந்து பொருளாதாரம், வேலைவாய்ப்பு, பெண்கள் மேம்பாடு என அனைத்துதுறைகளிலும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிராக அதிகரித்து வரும் கோபத்தை காண முடிகிறது. ஏராளமான மக்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக குரல் கொடுப்பதை பார்க்கிறோம். இந்த எதிர்ப்புக் குரல்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மோடி அரசு இறங்கியுள்ளது.
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பதிவிட்டதாக கூறி 1,178 ட்விட்டர் கணக்குகளை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரம், சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் பதிவிடும் ஆர்எஸ்எஸ், பாஜகவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை.
பாஜகவுக்கு எதிராக தனித்தனியாக இல்லாமல் ஒன்றிணைந்து ஒரே குரலாக ஒலித்தால்தான் பாசிச அரசை எதிர்க்க முடியும். நாடு முழுவதும் சிதறி ஒலிக்கும் காங்கிரஸ் ஆதரவாளர்களின் குரல்களை ஒரே குடையின் கீழ் ஒழுங்குபடுத்த வேண்டும். இதை மனதில் வைத்தே ‘காங்கிரஸ் சமூக ஊடகத்தில் இணையுங்கள்’ என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் சமூக ஊடகத் துறை தொடங்கியுள்ளது.
ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம், சுதந்திரத்தை பாதுகாக்க போராட விரும்புவோரை இந்த பிரச்சாரத்தில் இணைக்க வேண்டும்.
இதன்மூலம் 5 லட்சம் காங்கிரஸ் சமூக ஊடகப் போராளிகளை ஒன்றிணைக்க முடியும். இதில் 50 ஆயிரம் பேர் தேசிய, மாநில,மாவட்ட அளவிலான நிர்வாகிகளாக இருப்பார்கள். அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர், யூ-டியூப், இணையதளம், இமெயில்என பல்வேறு வழிகளில், நேர்காணல், வீடியோக்கள், ஆதாரங்களுடன் தகவல்கள், கருத்துகள், மீம்ஸ்கள் என விருப்பப்படி பிரச்சாரம் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.