சைபர் குற்றங்களை கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தனிகாவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பிப்.8-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் வர்த்தகத்தில் மோசடி, போன் மூலம் பேசி வங்கி கணக்கில் பணம் திருட்டை தடுப்பது மற்றும் குற்றவாளிகளின் இருப்பிடத்தை செல்போன் மூலம் கண்டறிவது உள்ளிட்ட பணிகளை சைபர் கிரைம் போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டு 27,248 ஆக இருந்த இணையவழி குற்றங்கள், 2019-ல் 44,546 ஆக உயர்ந்தது. பண மோசடி தொடர்பான வழக்குகள் மட்டும் ஒரே ஆண்டில் 60 சதவீதம் உயர்ந்தது. இணைய வழியாக நடைபெறும் பாலியல் மோசடி, தனிநபர் பழிவாங்கல் போன்ற குற்றங்களும் கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளன. சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் கர்நாடகா முதலிடத்திலும், உத்தர பிரதேசம் 2-வது இடத்திலும், தமிழகம் 3-வது இடத்திலும் உள்ளது. சைபர் குற்றங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7 சதவீதம் அதிகரித்து உள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
இதனால் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப காவல் துறையையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. அதைத் தொடர்ந்து சைபர் கிரைம்தொடர்பான குற்றங்களை விசாரித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தனியாக சைபர் கிரைம் காவல்நிலையங்கள் அமைக்கப்பட்டுள் ளன. மேலும், சென்னை, கோவை,திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய 7 மாநகரங்களுக்கென தனியாக 7 சைபர் கிரைம் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இவை தவிர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீஸ் ஆகிய 3 பிரிவுக்கும் தலா ஒரு சைபர் கிரைம் காவல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 46 சைபர் கிரைம் காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட சைபர் கிரைம் காவல் நிலையங்கள் அனைத்தும் பிப்ரவரி 8-ம் தேதிமுதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என டிஜிபி ஜே.கே.திரிபாதி தெரிவித்துள்ளார்.