தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இங்குள்ள குளங்கள், கண்மாய்கள் பலவும் ஏற்கெனவே நிரம்பியிருந்தன. நேற்று முன்தினம் இரவு இவ்விரு மாவட்டங்களிலும் விடாமல் கனமழை கொட்டியது.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை, கடம்பூர், மணியாச்சி, கயத்தாறு பகுதியில் பெய்த கனமழை காட்டாற்று ஓடையில் திடீர் வெள்ளமாக பெருக்கெடுத்தது. வழியெங்கும் குளங்கள் நிரம்பியிருந்ததால், தூத் துக்குடி அருகேயுள்ள கடைமடை குளமான கோரம்பள்ளம் குளம் வழியே 30 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரிநீர் வெளியேறியது.
இதன் காரணமாக தூத்துக்குடி யின் புறநகர்ப் பகுதியில் அமைந் துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், எஸ்.பி. அலுவலகம், புதுக்கோட்டை, மறவன்மடம், திரவியபுரம், அந்தோணியார்புரம், சோரீஸ்புரம், சிட்கோ தொழில் பேட்டை, கோரம்பள்ளம், மடத்தூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டன.
அரசு அலுவலகங்கள், கிராமங் களுக்குள் புகுந்த வெள்ளம் இடுப் பளவைத் தாண்டி ஓடியது. வீட்டுப் பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கியவர்கள் வீட்டு மொட்டை மாடிகளில் தஞ்சம் புகுந்தனர்.
எந்த அலுவலகத்திலும் நேற்று பணிகள் நடைபெறாமல் செயலிழந்தன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர், கடலோர காவல் படையினர் மற்றும் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். மொட்டை மாடியில் தங்கியிருந்த மக்களுக்கு படகுகள் மூலம் உணவு வகைகள் விநியோகிக்கப்பட்டன.
சாலை துண்டிப்பு
தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை மற்றும் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் வெள்ளம் ஓடியது. இதனால் போக்குவரத்து நிறுத் தப்பட்டது. எனினும், மதுரை அருப்புகோட்டை தூத்துக்குடி வழித்தடத்தில் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெற்றது. நேற்று பகலில் மழை பெய்யாததால் படிப்படியாக வெள்ளம் வடியத் தொடங்கியது.