என்னைத் தொகுதி மக்களுக்குத் தெரிந்தால் போதும். ஸ்டாலினுக்குத் தெரியத் தேவையில்லை என கதர் கிராமத் தொழில்கள் நல வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கால்நடைத் துறை சார்பில் நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வழங்கும் விழா நடந்தது. அமைச்சர் ஜி.பாஸ்கரன் பயனாளிகளுக்குக் கோழிக் குஞ்சுகளை வழங்கினார். எம்எல்ஏ நாகராஜன், கால்நடை பராமரிப்பு இணை இயக்குநர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவிற்குப் பிறகு அமைச்சர் பாஸ்கரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''சிவகங்கை மாவட்டத்திற்குப் பெரிய திட்டமான காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து காவிரி- வைகை- குண்டாறு திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். என்னைச் சட்டப்பேரவையில் பார்க்கவில்லை என்று ஸ்டாலின் கூறியுள்ளார். என்னைத் தொகுதி மக்களுக்குத் தெரிந்தால் போதும், ஸ்டாலினுக்குத் தெரியத் தேவையில்லை. மக்களுக்குத் தெரியவில்லை என்றால்தான் அசிங்கம்.
மேலும், என்னை அமைச்சர் என்று ஒப்புக் கொள்கிறாரே, அதுவே போதும். திமுக மாதிரி கூச்சலிடுவது, இருக்கையை உடைப்பதைச் செய்தால்தான் அவருக்குத் தெரியுமோ, என்னவோ. அது திமுகவின் பாரம்பரியம். நாங்கள் ஜெயலலிதா வழியில் வந்தவர்கள். அமைதியாகத்தான் இருப்போம். மேலும் அவர்கள் வாரிசு வழியாக வந்தவர்கள் என்பதால் அனைத்து மக்களுக்கும் தெரியும். நாங்கள் சாதாரண மனிதர்களாக இருப்பவர்கள்.
சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது குறித்துத் தலைமை என்ன முடிவு செய்கிறதோ, அதை ஏற்போம்'' என்று அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்