ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் முழுமையடைந்தால் திருப்பூர் வாஷிங்டனாக மாறும் என்று தோப்பு வெங்கடாச்சலம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் தோப்பு வெங்கடாச்சலம், திருப்பூரில் நடந்து வரும் பல்வேறு பணிகளை இன்று பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிலையம், வணிக வளாகம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அத்திக்கடவு-அவிநாசி திட்டம், கொடிவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட பணிகளைப் பார்வையிட்டோம். போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருப்பூர் மாநகராட்சியைப் பொறுத்தவரை கேட்டவுடன் குடிநீர் இணைப்பு பொதுமக்களுக்குக் கிடைக்கும் வகையில், குடிநீர்த் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இங்குள்ளவர்கள் தொழில் மற்றும் சொந்த வேலை நிமித்தமாக, திருப்பூர் மாநகரில் இருந்து- கோவை விமான நிலையம் செல்லும் வரை எவ்விதக் குறுக்கீடு இல்லாத ’எக்ஸ்பிரஸ் வே’ என்ற மேம்பாலப் பாதையை அமைக்க ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளோம்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைத் திருப்பூருக்குக் கொண்டுவந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவின் தலைசிறந்த வாஷிங்டன் நகரைப் போல், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் முழுமையடைந்ததும், இந்தியாவின் மிக முக்கியமான நகரமான திருப்பூர் மாநகரமும் விளங்கும். வாஷிங்டன் நகரில் என்னென்ன அடிப்படை வசதிகள் உள்ளதோ, அந்த வசதிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருப்பூரிலும் கிடைக்கும்''.
இவ்வாறு தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்தார்.