தமிழகத்தில் பாஜக அடைந்துள்ள வளர்ச்சிக்கு ஏற்ப சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு இருக்கும் என, அக்கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா நம்பிக்கை தெரிவித்தார்.
இது தொடர்பாக, கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று (பிப். 09) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் உருவான மருத்துவர்கள், பொறியாளர்கள் பலருக்கு அடிப்படைத் தமிழே தெரியாது. இப்படித் தமிழை அழித்தது திராவிட இயக்கங்கள்தான்.
திமுக தலைவர்களின் வாரிசுகள் நடத்தும் பள்ளிகளில் தமிழுக்கு இடம் இல்லை. தமிழ்நாட்டுக்கு இருமொழிக் கொள்கை. தன் வீட்டுக்கு மும்மொழிக் கொள்கை என்று அவர்கள் உள்ளனர். எம்மதமும் சம்மதம் என்று சொல்வது சரியானால், எம்மொழியும் என் மொழி என்று சொல்வது எப்படித் தவறாகும். தமிழை வளர்க்க நினைக்கும் கட்சி பாஜக மட்டுமே.
சசிகலா என்ன வேண்டுமானாலும் முடிவு எடுக்கலாம். அதற்கும் அதிமுகவுக்கும் தொடர்பு இல்லை. அமமுகவில் தினகரன் இடத்துக்கு வேண்டுமானால் சசிகலா வரலாம். சசிகலா வருகையால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
ஆண்டாளை இழிவாகப் பேசிய வைரமுத்துவைக் கைது செய்யாமல், முகமது நபிகள் குறித்துப் பேசிய பாஜக நிர்வாகி கல்யாணராமனைக் கைது செய்தது பாரபட்சமானது.
காங்கிரஸ் கேட்கும் இடங்களை திமுக கொடுக்க மறுப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இதனால் ஓவைசி, காங்கிரஸ், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகியவை கூட்டணி சேரலாம்.
விரைவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வரும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போல சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொகுதிப் பங்கீடு சுமுகமாக நடக்கும். தமிழகத்தின் எந்த கிராமத்திலும் பாஜக கொடியைப் பார்க்க முடியாமல் உள்ளே செல்ல முடியவில்லை என எங்களுக்கு எதிராக விமர்சனம் செய்பவர்களே ஒப்புக்கொள்கின்றனர். எனவே, எங்களது வளர்ச்சிக்கு ஏற்றது போல் தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வரும்".
இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.
அப்போது கட்சியின் கோவை மாவட்டத் தலைவர் நந்தகுமார், மாவட்டப் பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.தாமு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.