ஊதிய முரண்பாடுகளைக் களைய வலியுறுத்தி கோவில்பட்டியில் கிராம சுகாதாரச் செவிலியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம சுகாதாரச் செவிலியர்களுக்கு வீட்டு வாடகைப்படி பிடித்ததைக் கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கிராம சுகாதாரச் செவிலியர், பகுதி சுகாதாரச் செவிலியர் ஆகியோரின் ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும், தமிழக அரசு தொடங்கியுள்ள அம்மா சிறிய மருத்துவமனைகளுக்கு சுகாதார நிலையத்தை பயன்படுத்தக் கூடாது, சுகாதாரச் செவிலியர்களுக்கு அதிக பணிச்சுமை கொடுக்கக் கூடாது, பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும், இ- சஞ்சீவி மற்றும் பயோமெட்ரிக் செயலிகளைப் பயன்படுத்துவதைக் கைவிட வேண்டும், சங்க நிர்வாகிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம சுகாதாரச் செவிலியர் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் இன்று நடந்தது.
கோவில்பட்டி சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு மாநிலப் பொதுச் செயலாளர் பாப்பா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மகாலட்சுமி, மாவட்டச் செயலாளர் கஸ்தூரி, மாவட்டப் பொருளாளர் இந்திரா, மாவட்டத் துணைத் தலைவர் ரமணி பாய், மாவட்ட இணைச் செயலாளர் ரெங்கநாயகி, மாவட்ட அமைப்புச் செயலாளர் நாச்சியார், மாவட்ட பிரச்சாரப் பிரிவுச் செயலாளர் சாந்தி குட்டி மற்றும் கோவில்பட்டி சுகாதார மாவட்டத்துக்கு உட்பட்ட கிராம சுகாதாரச் செவிலியர்கள், பகுதி சுகாதாரச் செவிலியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.