திருமாவளவன்: கோப்புப்படம் 
தமிழகம்

என்எல்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அநீதி; தேர்வை ரத்து செய்யக் கோரி பிப்.15-ல் விசிக ஆர்ப்பாட்டம்; திருமாவளவன் அறிவிப்பு

செய்திப்பிரிவு

என்எல்சி நிறுவனத்தில் நிர்வாகப் பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான எழுத்துபூர்வத் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, திருமாவளவன் இன்று (பிப். 09) வெளியிட்ட அறிக்கை:

"என்எல்சி நிறுவனத்தில் 259 பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான எழுத்துபூர்வத் தேர்வு நடைபெற்றது. அதில் 1,582 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி அடைந்தவர்களில் 4% மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 96% வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் தேர்ச்சி விகிதம் இப்படிக் குறைவாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதில் தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட சதி இருக்குமோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

அண்மைக்காலமாக தமிழ்நாட்டிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களிலும், ரயில்வே முதலான நிறுவனங்களின் பணி நியமனங்களிலும் கூட இதேபோல வட மாநிலத்தவர் திட்டமிட்டுப் புகுத்தப்படுகின்றனர்.

என்எல்சி நிறுவனம் என்பது மற்ற பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து வேறுபட்டது. இது தமிழ்நாட்டினுடைய கனிம வளங்களை எடுத்து அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறது. இதற்கான நிலங்கள் இந்தப் பகுதி மக்களால் வழங்கப்பட்டவை. எனவே, தமிழக மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தி அவற்றிலிருந்து கனிம வளங்களை எடுத்துப் பயன்படுத்துகிற இந்த நிறுவனத்தின் பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். அதற்கான விதிகளை மத்திய அரசு வகுக்க வேண்டும். அதைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தமிழகத்தின் வளங்களை மத்திய அரசு சுரண்டுவது மட்டுமின்றி தமிழகத்தின் வேலைவாய்ப்புகளையும் களவாடுவதற்கு நாம் அனுமதிக்க முடியாது.

எனவே, தற்போது நடத்தப்பட்ட தேர்வை என்எல்சி நிறுவனம் ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களையே பணிகளில் நியமிக்க வேண்டும். அதற்கேற்ப பணி நியமன வரையறைகளை அல்லது தேர்வு முறைகளை வகுத்திட வேண்டுமென வலியுறுத்தி நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் எனது தலைமையில் எதிர்வரும் பிப்ரவரி 15ஆம் தேதி காலை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT