தமிழகத்தின் வட மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியை வைத்துள்ளது பாமக. ஒவ்வொரு முறையும் சட்டப்பேரவை, மக்களவை தேர்தலின்போது கூட்டணி குறித்த பாமகவின் முடிவு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுக, திமுக என மாறி மாறி கூட்டணி வைத்து வந்த பாமக மாற்றம், முன்னேற்றம், அன்புமணி’ என்ற முழக்கத்தோடு 2016 சட்டப்பேரவை தேர்தலை தனித்து சந்தித்தது.
ஆனால், போட்டியிட்ட 232 தொகுதிகளிலும் பாமக படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, 2019 மக்களவை தேர்தலில் மீண்டும் தனது நிலையை மாற்றிக்கொண்டு அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தனர். அதிமுக, திமுகவை கடுமையாக விமர்சித்துவிட்டு, மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த பாமகவை அனைவரும் விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி அடைந்தது. பின்னர், ஒப்பந்தத்தின்படி மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், தனித்துப் போட்டியிடும் முடிவை கைவிட்டுள்ள ராமதாஸும், அன்புமணியும், வரவுள்ள 2021 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி பேரத்தை அதிகரிக்க, வன்னியர் இடஒதுக்கீடு விஷயத்தை எடுத்தனர். கட்சியின் ஒரு தரப்பினர் தற்போதுள்ள அதிமுக கூட்டணியில் தொடரலாம் என்றும், மற்றொரு தரப்பினர் திமுக கூட்டணிக்கு செல்லலாம் என்றும் தெரிவித்தனர். வன்னியர் இடஒதுக்கீடு அறிவிக்காவிட்டால் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்ற ரீதியில் ராமதாஸ் தெரிவித்தார். ஒரு காலத்தில், பாமகவை எப்படியாவது கூட்டணியில் சேர்க்க முயற்சி செய்த திமுக, இப்போது ஆரம்பத்திலேயே கூட்டணி கதவை மூடியது. பாமகவை கூட்டணியில் சேர்க்காமல் தேர்தலை சந்திக்கும் முடிவுக்கு திமுக வந்துவிட்டது. தற்போதைய நிலையில் பாமகவுக்கு அதிமுக கூட்டணியில் தொடர வேண்டியுள்ளது.
அதனால், வன்னியர் இடஒதுக்கீடு பிரச்சினையில் ஆளும் அதிமுக அரசு முடிவு அறிவிக்காமல் தள்ளிப்போட்டு வருகிறது. வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி 6 கட்டங்களாக போராட்டம் நடத்திய ராமதாஸும், அன்புமணியும் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டு, உள் ஒதுக்கீடு வழங்கினால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த 2 மாதத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் பல கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகியுள்ளது. ஆனால், வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடதுக் கொண்டே இருக்கிறது. முதல்வர் பழனிசாமியை ராமதாஸ் சந்தித்து பேச இருப்பதாகவும், அப்போது வன்னியர் உள் ஒதுக்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிகிறது.