தமிழகம் முழுவதும் பிப்.11-ம்தேதி வரை வாகன சோதனையைத் தீவிரப்படுத்த போலீஸாருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 2 தினங்களாக போலீஸார் தீவிரவாகன சோதனைகளில் ஈடுபட்டனர். அகதிகள் முகாம்களிலும் அந்தந்த எல்லைக்கு உட்பட்ட போலீஸார் சோதனை நடத்தினர்.
சசிகலாவின் சென்னை வருகையை முன்னிட்டு சென்னை - பெங்களூரு சாலைகளில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம், முதல்வர், அமைச்சர்களின்வீடுகள் இருக்கும் பகுதிகளிலும் அதிக அளவில் போலீஸார்குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அப்பகுதிகளில் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டது.
புதுச்சேரியில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வழிகளிலும் வழக்கமான மதுபான சோதனை மட்டுமின்றி, குறிப்பிட்ட நபர்களை தேடும் விதத்தில்போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.
இதேபோல தமிழக - கேரளஎல்லைப் பகுதிகளிலும் தீவிரவாகன சோதனை நடந்தது. இதில்,சந்தேக நபர்கள் என 173 பேரை போலீஸார் பிடித்துள்ளனர்.
சென்னை, கோவை உள்ளிட்டபெருநகரங்களில் உள்ள தனியார்விடுதிகளிலும் போலீஸார் சோதனை நடத்தினர். இதில், சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள விடுதியில் பாஸ்போர்ட், விசா இன்றி தங்கியிருந்த நைஜீரிய நாட்டு 4 இளைஞர்கள் பிடிபட்டனர். அவர்கள் போதைப் பொருள் விற்பனை கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர். வரும் 11-ம் தேதி வரை வாகன சோதனைகளை தொடர்ந்து நடத்துமாறு அனைத்து காவல்நிலையங்களுக்கும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.