கண்டதேவி கோவில் கும்பாபிஷேக விழாவுக்கான குழுவில் கிராம மக்கள் சார்பில் பிரதிநிதியை சேர்க்கக்கோரிய வழக்கில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கையைச் சேர்ந்த செந்தில்நாதன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
"கண்டதேவி கிராம ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்தத் திருவிழாவில் முதல் மரியாதை பெறுவதில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பான வழக்கில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளாக யாருக்கும் முதல் மரியாதை வழங்காமல் புரட்டாசி திருவிழா நடத்தப்படுகிறது.
புரட்டாசி திருவிழாவுக்கு ஊரிலிருந்து இருவர் வருவாய் துறையினரால் நியமிக்கப்பட்டு கணக்குகள் சரிபார்க்கப்பட்டன. தற்போது கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த மக்கள் முடிவு செய்துள்ளனர்.
இதனால் கும்பாபிஷேக குழுவில் ஊர் மக்கள் சார்பில் கோவில் விழாக்களில் முறையாக பணிபுரிந்த முன்னாள் நிர்வாகிகள் அல்லது வழக்கில் சம்பந்தப்படாத நேர்மையானவர்களை நியமிக்க வேண்டியது அவசியம்.
கும்பாபிஷேக குழுவில் ஊர் மக்கள் பிரதிநிதிகள் இடம்பெறாவிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கண்டதேவி கோவில் கும்பாபிஷேக விழாக்குழுவில் முறையாக பணிபுரிந்த முன்னாள் நிர்வாகிகள் அல்லது வழக்குகளில் சம்பந்தப்படாத நேர்மையானவர்களை ஊர் மக்கள் சார்பில் நியமிக்க உத்தரவிட வேண்டும்"
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 8-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.