மதுரையில் அமையும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையைத் தவிர நாடு முழுவதும் அமையும் மற்ற ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளுக்கு மத்திய அரசே நேரடி நிதி ஒதுக்கீடு செய்வதாகவும், மதுரைக்கு மட்டும் ஜப்பான் நாட்டிடம் கடன் பெற உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாக ஆர்டிஐ-தகவலில் தெரிவித்துள்ளது.
டெல்லி ‘எய்மஸ்’ மருத்துவமனையை போல் நாடு முழுவதும் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில், மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமவனை தோப்பூரில் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைய உள்ளது.
பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய இந்த மருத்துவமனை கட்டுமானப்பணி தற்போது வரை தொடங்கப்படவில்லை. ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம், இதுவரை தொடங்கவில்லை.
நாடு முழுவதும் அறிவித்த மற்ற ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு மத்திய அரசு நேரடியாக நிதி ஒதுக்கிய நிலையில் மதுரைக்கு மட்டும் ஜப்பான் நிறுவனத்திடம் நிதி ஒதுக்கீடு செய்வதால் கட்டுமானப்பணி தாமதமாகுவதாக தகவல் வெளியானது.
ஆனால், மத்திய அரசு நேரடியாக இதுவரை பதில் அளிக்காமல் இருந்தது.
இந்நிலையில் இந்த மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீடு குறித்து இரா.பாண்டிராஜா என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பல்வேறு கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு மத்திய சுகாதாரத்துறை, மதுரைக்கு மட்டுமே ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் நிதி கேட்கப்பட்டுள்ளதாகவும், மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசே நேரடியாக நிதி ஒதுக்குவதாகவும் அதிகாரபூர்வமாக கூறியுள்ளது.
இதுகுறித்து பாண்டிராஜா கூறுகையில், ‘‘இதுவரை அதிகாரபூர்வமாக இல்லாமல் வாய்மொழியாகவே மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்வதாக கூறி வந்தனர். ஆனால், தற்போது இந்த ஆர்டிஐ மூலம், அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, ’’ என்றார்.