திருச்சி மாநகரக் காவல் ஆணையர் ஜெ.லோகநாதனுக்குக் கரோனா தடுப்பூசி இடும் செவிலியர். | படம்:ஜி.ஞானவேல்முருகன். 
தமிழகம்

கரோனா தடுப்பூசி தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம்: திருச்சி காவல் ஆணையர் கருத்து

ஜெ.ஞானசேகர்

கரோனா தடுப்பூசி தொடர்பாகச் சமூக வலைதளங்களில் வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று திருச்சி மாநகரக் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் தெரிவித்துள்ளார்.

மருத்துவத் துறையினரைத் தொடர்ந்து முன்களப் பணியாளர்களான உள்ளாட்சி, வருவாய், காவல் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த வரிசையில் திருச்சி மாநகரக் காவல் துறையினருக்குக் கரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாநகரக் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு, இந்தப் பணியைத் தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து பிறருக்குத் தடுப்பூசி இடப்பட்டது.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் மாநகரக் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் கூறும்போது, ''திருச்சி மாநகரக் காவல் துறையில் 1,824 பேருக்குக் கரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. இதற்கான பெயர்ப் பட்டியல் ஏற்கெனவே தயார் செய்து அளிக்கப்பட்டுள்ளது. மாநகரில் 5 இடங்களில் தினமும் தலா 100 பேருக்குக் கரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள் என நாட்டில் இதுவரை 40 லட்சம் பேருக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனவே, கரோனா தடுப்பூசி தொடர்பாகச் சமூக வலைதளங்களில் வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டியதில்லை'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT