தமிழகம்

திமுக அறிவித்த ரூ.1 கோடி வெள்ள நிவாரண நிதி: அரசிடம் வழங்கினார் மு.க.ஸ்டாலின்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் வெள்ள நிவாரண உதவிகளுக்காக திமுக சார்பில், அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடி நிதியை தமிழக அரசிடம் வழங்கினார் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை (செவ்வாய்க்கிழமை) அரசு நிதித் துறை முதன்மை செயலாளரிடம் அவர் அந்த நிதியை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "தமிழகத்தில் வெள்ள நிவாரண உதவிகளுக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டது. ஆனால், இதைப் பெற்றுக் கொள்ள அரசு தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தது. நிதியை வழங்க அனுமதி கோரிய போதெல்லாம் ஏதாவது சாக்குபோக்கு சொல்லப்பட்டது.

இதனால், அரசு நிதித் துறை முதன்மை செயலாளரை சந்தித்து திமுகவின் நிவாரண நிதி ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளேன்.

வெள்ள சேதங்களை தமிழக முதல்வர் இதுவரை நேரடியாக பார்வையிடவில்லை. இது மிகுந்த வேதனையளிக்கிறது. வெள்ள நிவாரணத்துக்காக தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதி குறித்து வெள்ளை அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT