ஓசூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து இன்று வழிபட்டார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா இன்று (பிப்.8) காலை பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் தமிழக எல்லை வந்து சேர்ந்தார்.
சசிகலாவை வரவேற்கத் தமிழக எல்லை முதல் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 10 அடிக்கு ஓர் அமமுக கட்சிக் கொடி, கட் அவுட், பேனர்கள் மற்றும் வாழை மரம் கட்டப்பட்டு, சாலையே விழாக்கோலம் பூண்டிருந்தது. தமிழக ஓசூர் எல்லையில் சசிகலாவுக்கு ஆளுயர ரோஜா மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சசிகலாவை வரவேற்கத் திருச்சி, சேலம், தருமபுரி, சிவகங்கை, திருநெல்வேலி, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான தனியார் பேருந்துகளில் தொண்டர்கள் எல்லையில் குவிந்திருந்தனர். அதே போல சாலையின் இருபுறமும் ஆதரவாளர்களின் 300-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அமமுக மகளிர் அணியினர் சசிகலாவுக்கு ஆரத்தி எடுத்தனர்.
தமிழக எல்லையான ஜூஜூவாடியில் இருந்து புறப்பட்ட சசிகலா, ஓசூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். அதனைத் தொடர்ந்து ஒசூர் ராயக்கோட்டை சாலை சந்திப்பு எம்ஜிஆர் சிலை அருகே அமமுக சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
குறிப்பாக ஓசூரில் 3 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் சசிகலாவைப் பார்க்கப் பொதுமக்கள் குவிந்திருந்தனர். சுமார் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.