தீப்பிடித்து எரிந்த கார்கள். 
தமிழகம்

சசிகலா வரவேற்பு நிகழ்ச்சியின் போது பட்டாசு வெடித்ததில் தீப்பிடித்து எரிந்த கார்கள்

எஸ்.கே.ரமேஷ்

சசிகலா வரவேற்பு நிகழ்ச்சியின் போது பட்டாசு வெடித்ததில் தீப்பொறி பட்டு 2 கார்கள் தீப்பிடித்து எரிந்தது.

பெங்களூருவில் இருந்து சசிகலா இன்று (பிப். 08) தமிழகம் திரும்பினார். இதையொட்டி, அவருக்கு வரவேற்பு அளிப்பதற்காக கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் ஏராளமான அமமுக தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திரண்டு இருந்தனர்.

அப்போது, அப்பகுதியில் சிலர் பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தனர். பட்டாசு வெடித்து சிதறி பொறி அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சைலோ கார் ஒன்றின் மீது விழுந்தது. இதில் அந்த கார் தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் அருகில் இருந்த மற்றொரு ஹோண்டா சிட்டி காரும் தீப்பிடித்தது.

இந்த விபத்தில் 2 கார்களும் முழுமையாக தீப்பிடித்து எரிந்தன. இதைக் கண்டு அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும், அருகில் இருந்த 3 கார்களை சிறிது தூரத்திற்கு கைகளால் தள்ளிச் சென்றனர்.

தகவல் அறிந்து தீயணைப்பு வீரரகள் விரைந்து வந்து 2 கார்களில் பிடித்திருந்த தீயை அணைத்தனர்.

அதற்குள் 2 கார்களும் முழுமையாக எரிந்து சேதம் அடைந்தன. 2 கார்களில் ஹோண்டா சிட்டி கார் ஈரோட்டைச் சேர்ந்த அமமுக பிரமுகர் விஜயகுமாரின் கார் எனத் தெரிய வந்துள்ளது. மற்றொரு சைலோ கார் யாருடையது எனத் தெரியவில்லை.

இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக, கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

SCROLL FOR NEXT