மதுரையில் கருணாநிதி சிலை அமைக்க பெருந்தன்மையுடன் அனுமதி வழங்கியது அதிமுக அரசு என்பதை மு.க.ஸ்டாலின் மறந்து விடக்கூடாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள சிவரக்கோட்டையில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் முழு நீள வெண்கல சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசியதாவது:
ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தாய் மண்ணைக் காக்கவும், நட்புக்காகவும் விசுவாசத்திற்காகவும் எடுத்துக்காட்டாய் திகழ்ந்த மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு சிலை அமைப்பதற்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகம் பெருமை கொள்கிறது
இதன் மூலம், மதுரையில் உள்ள 10 தொகுதிகள் மட்டுமல்லாது தென் தமிழகத்தின் வரலாற்று முக்கிய சின்னமாக இந்த இடம் திகழும் மேலும் மருது சகோதரர்கள் தியாகத்தை வருங்கால இளைய சமுயாத்திற்கு கூறும் வகையிலும், தமிழ் சமுதாயத்தின் மீது பற்றும், விசுவாசமும் கொண்டுள்ள மருது சகோதர்களின் புகழ் நூறாண்டு ஆனாலும் எடுத்துச்சொல்ல வகையில் இந்த நிகழ்வு திகழும்
இன்னும் பத்து தினங்களில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் சிலை திறக்கப்பட உள்ளன.
சாதி, மதம் பார்க்காமல் நாட்டுக்காக உழைத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தி அவர்களுக்கு புகழ் மேல் புகழ் சேர்த்து வருகிறது அதிமுக அரசு.
கடைக்கோடியில் பிறந்து தமிழகத்துக்கு புகழ் சேர்த்த டாக்டர் அப்துல் கலாம் மறைந்த செய்தி கேட்டவுடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, என்னிடம் உடனடியாக ஒரு மணி நேரத்திற்குள் நினைவிட அரசாணை கோப்பு தயாராக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதன்படி ராமேஸ்வரம் பேக்கரும்பில் அப்துல்கலாம் நினைவிடம் ஒரு மணி நேரத்தில் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு உலக கவனத்தை ஈர்த்தார்.
தமிழ் மக்களுக்காக வாழ்ந்த தியாகிகளைப் போற்றி புகழ் சேர்த்திட ஜெயலலிதாவுக்கு மிஞ்சியவர் யாரும் கிடையாது. தியாகிகளுக்கு மணி மண்டபம், நினைவு மண்டபம், திருவுருவச்சிலை இப்படி அமைத்து புகழ் சேர்த்தார். அதன் வழியே இன்றைக்கு முதல்வரும் துணை முதல்வரும் புகழ் சேர்த்து வருகின்றனர்
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சி காலத்தில் இந்தப் பகுதியில் உள்ள 1,500 ஏக்கர் சிப்காட் திட்டத்துக்காக எடுத்தனர் விவசாயிகள் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் சென்றனர். அங்கு சரிவர தீர்வு காணப்படவில்லை. தற்போது நீங்கள் என்னிடம் கூறினீர்கள். அதை முதலமைச்சரிடம் எடுத்துச் சென்று அந்த அரசாணையை ரத்து செய்யப்பட்டது. தற்போது நிலம் உரியவர்களுக்கு வந்து சேர்ந்துள்ளது.
இன்றைக்கு மதுரை சிம்மக்கல்லில் கருணாநிதிக்கு சிலை அமைக்க பெருந்தன்மையுடன் அனுமதி வழங்கிய அரசு அம்மா அரசாங்கம். அதுமட்டுமல்லாது மெரினா கடற்கரையில் முதலமைச்சராக இருப்பவர்கள் மறைந்தால் தான் அவர்களுக்கு அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும்
அதன்படி அண்ணா, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோருக்கு தான் அந்த அனுமதி இருந்தது ஆனால் திமுக தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் கடற்கரையில் கருணாநிதியை அடக்கம் செய்ய அனுமதி வழங்க முதலமைச்சர் எனக்கு உத்தரவிட்டார்
அதன்படி அனுமதி வழங்கப்பட்டது இதே திமுக ஆட்சியில் இதே நிலையில் இருந்தால் அனுமதி வழங்கி இருப்பார்களா என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்
அரசாங்கத்தின் சார்பிலும் சிலை அனுமதி ஒருபுறம் இருந்தாலும் கழகத்தின் சார்பிலும் ஜெயலலிதாவிற்கு கோயில் கட்ட அனுமதி வழங்கியவர்கள் முதலமைச்சர் துணை முதலமைச்சர் ஆவார்கள்
இன்றைக்கு புரட்சித் தலைவருக்கும், புரட்சி தலைவி அம்மாவும் மண்ணில் புதைக்கப் படவில்லை விதைக்க பட்டுள்ள தியாகச்சுடர் ஆவார்கள் அவர்கள் வழியில் தளபதிகளாய் இன்றைக்கு முதல் அமைச்சரும் துணைமுதலமைச்சரும் இருந்து வருகின்றனர். இன்றைக்கு இந்த இயக்கத்திற்கு எதிராக எதிர் கட்சியினர் விஷ விதை தூவினாலும் மக்களாகிய நீங்கள் அதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்