நிதித்துறை சார்பில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தில் அரசின் வரவுகளை மின்செலுத்துச் சீட்டு (e-challan) மூலம் பெறும் நடைமுறையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப். 8) தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (பிப். 08) வெளியிட்ட செய்தி வெளியீடு:
"அரசுப் பணிகள் திறம்பட மற்றும் செவ்வனே நடைபெற நிதி மற்றும் மனிதவள மேலாண்மையை ஒருமைப்படுத்தி ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் கடந்த 10.1.2019 அன்று தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள கருவூலம் மற்றும் சம்பளக்கணக்கு அலுவலகங்களில் தற்போது 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் நேரடியாக இணையத்தின் வாயிலாக பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்கின்றனர்.
மேலும், சுமார் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டு சம்பளப் பட்டியல், பதவி உயர்வு, பணி மாறுதல்கள், விடுப்பு போன்ற மற்ற விவரங்கள் உடனுக்குடன் பதிவிடப்பட்டு வருகிறது.
இந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டமானது, டிஜிட்டல் ஒப்பம் மற்றும் பயோமெட்ரிக் முறை மூலம் உறுதிப்படுத்தும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாகும்.
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் அடுத்த கட்டமாக, கருவூலத்தில் பெறப்படும் அரசின் வருவாய் இனங்களை மின்வரவாக மின் செலுத்துச்சீட்டு மூலமாக நேரடியாக பெறுவதற்கான நடைமுறையை தமிழ்நாடு முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.
இதன்மூலம், பொதுமக்கள் / அரசு துறை நிறுவனங்கள் / உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை அரசுக்கு செலுத்த வேண்டிய வரவினங்களை, மின்வரவுகளாக 24 மணிநேரமும் தங்குதடையின்றி இணையத்தின் மூலம் (www.karuvoolam.tn.gov.in) செலுத்த வசதிகள் ஏற்படுத்தப்படுவதால், அரசு நிகழ்நேர வருவாயை உடனுக்குடன் பெற இயலும்.
இச்சேவைகளுக்காக, பாரத ஸ்டேட் வங்கி, பரோடா வங்கி, இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய நான்கு வங்கிகளை திரட்டல் வங்கிகளாக தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பரோடா வங்கி ஆகிய இரு வங்கிகள் இத்திட்டத்தில் ஒருங்கிணைப்பு பணிகளை முடித்துள்ள நிலையில் இவ்விரு வங்கிகளின் வாயிலாக முதற்கட்டமாக அரசின் வருவாய்கள் பெறப்பட்டு, அரசின் ரிசர்வ் வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வங்கிகளில் நேரடியாக பணம் செலுத்தும் திட்டமும் சிறிது காலத்திற்கு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.