தமிழகம்

சசிகலா காரைப் பின்தொடர்ந்த இளைஞர்: செல்ஃபி எடுத்துக்கொண்ட சசிகலா

செய்திப்பிரிவு

பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பும் சசிகலா காரை இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்த நிலையில், அவரைத் தன்னுடன் செல்ஃபி எடுக்க சசிகலா அனுமதித்த காணொலி வைரலாகி வருகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் தண்டனையை முடித்த சசிகலா, கடந்த ஜன. 27-ம் தேதி விடுதலையானார். கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்ற அவர், பெங்களூருவில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

பெங்களூருவில் மருத்துவமனையிலிருந்து திரும்பும்போது அவர், அதிமுக கொடி பொருத்தப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ப்ராடோ காரை பயன்படுத்தினார்.

இதற்கிடையே சசிகலா இன்று (பிப். 8) காலை பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை நோக்கிப் புறப்பட்டார். சசிகலா காரில் இருந்தபோதே, அவருக்குப் பெண்கள் ஆரத்தி எடுத்தனர். அவர் புறப்படுவதையொட்டி, கர்நாடக காவல்துறை சார்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை வரும் அவரை வரவேற்க அமமுக தொண்டர்கள் சார்பில் பல்வேறு விதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிமுக கொடியைப் பொருத்தக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளைக் காவல்துறையினர் விதித்துள்ளனர். சென்னை வந்து கொண்டிருக்கும்போது சசிகலாவின் காரை இரு சக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்தார். கார்கள் சீறிப் பாய்ந்த நிலையில், இளைஞர் பின்தங்கினார். எனினும் வேகமாக வந்த அவர், சசிகலாவுடன் பேச முற்பட்டார்.

இதைத் தொடர்ந்து கார்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. காவல்துறையினரும் சசிகலாவின் பாதுகாப்பாளர்களும் இளைஞரை அகற்ற முற்பட்டனர். ஆனாலும் முண்டியடித்து முன்பு வந்த இளைஞர், காருக்குள் இருந்த சசிகலாவிடம் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு சசிகலா அனுமதி அளித்தார்.

உடனே செல்ஃபி எடுத்துக்கொண்ட இளைஞர், சசிகலாவுக்கு வணக்கம் சொல்லிவிட்டுக் கிளம்பினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பான காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT