கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து சசிகலா, அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னைக்குப் புறப்பட்டார்.
சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் தண்டனையை முடித்த சசிகலா, கடந்த ஜன. 27-ம் தேதி விடுதலையானார். கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்ற அவர், பெங்களூருவில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
பெங்களூருவில் மருத்துவமனையிலிருந்து திரும்பும்போது அவர், அதிமுக கொடி பொருத்தப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ப்ராடோ காரை பயன்படுத்தினார்.
இந்நிலையில், அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என டிஜிபியிடம் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி உள்ளிட்டோர் புகார் அளித்தனர்.
இந்நிலையில், சசிகலா இன்று (பிப். 8) காலை பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை நோக்கி புறப்பட்டார். அப்போது, சசிகலா காரில் இருந்தபடியே, அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனர்.
அவர் புறப்படுவதையொட்டி, கர்நாடக காவல்துறை சார்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. சென்னை வரும் அவரை வரவேற்க பல்வேறு விதமான ஏற்பாடுகள் அமமுக தொண்டர்கள் சார்பில் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.
சசிகலாவை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஜெய் ஆனந்த் ஆகியோர் சென்னைக்கு அழைத்து வருகின்றனர். சசிகலா வரும் வழியில் இரு பக்கங்களிலும் அமமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.