தமிழகம்

4-வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு சென்னையில் பிப்.21-ல் மக்கள் நீதி மய்யத்தின் பிரம்மாண்ட மாநாடு: தொண்டர்கள் அணிதிரண்டு வர கமல்ஹாசன் அழைப்பு

செய்திப்பிரிவு

மக்கள் நீதி மய்யத்தின் 4-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னையில் வரும் 21-ம் தேதி பிரம்மாண்ட மாநாடு நடத்தப்படுவதாக கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதம்:

பெருங்கனவுகளோடு மக்கள் நீதி மய்யத்தை நாம் தொடங்கி வெற்றிகரமாக 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளோம். நேர்மையான, ஊழலற்ற நல்லாட்சிக்கான வேட்கை எங்கும் நிலவுவதை நமது பிரச்சார பயணத்தில் கண்கூடாக பார்க்க முடிகிறது. நல்லாட்சி தருவதற்குரிய தகுதியும், அருகதையும் நமக்குத்தான் இருக்கிறது என்பதே மக்களின் நம்பிக்கை.

கடந்த மக்களவை தேர்தலில்சின்னம் கிடைத்த 20 நாட்களில் நாம் பெற்ற வாக்குகள், அனைவரையும் விழிவிரியச் செய்த சாதனை. இன்று விரிவுபடுத்தப்பட்ட கட்டமைப்புடன், அற்புதமான செயல் திட்டங்களுடன், பிரம்மாண்டமான மக்கள் செல்வாக்குடன் தமிழகம், புதுவையில் முதல்முறையாக சட்டப்பேரவை தேர்தலில் களம் காண இருக்கிறோம். நாம் உறுதியாக வெல்வோம்.

இந்த நிலையில், 4-வது ஆண்டுதொடக்க விழாவை கொண்டாடும் வகையிலும், நமது மகத்தான தேர்தல் வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையிலும் சென்னையில் பிப்ரவரி 21-ம் தேதி பிரம்மாண்டமான மாநாடு நடத்தப்படுகிறது.

இந்த மண், மொழி, மக்களை காக்கவே நாம் களம் இறங்கி இருக்கிறோம். இந்த மகத்தான பயணத்தில் எதுவும் நமக்கு தடையல்ல. நாம் ஒருபோதும் துவளும் படையல்ல என்பதை தமிழகத்துக்கு உணர்த்த மக்கள் நீதி மய்யத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த மாநாட்டுக்கு அணி திரள வேண்டும்.

பழிபோடும் அரசியல், பழிவாங்கும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வழிதேடும் அரசியல், வழிகாட்டும் அரசியலுக்கு தொடக்க உரையை சேர்ந்து எழுதுவோம். ஊர் கூடி தேர் இழுத்தால், நாளை நமதே. இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாநாடு நடத்துவதற்காக கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், பொதுச் செயலாளர்கள் மவுரியா, முருகானந்தம் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பட்டியலையும் கமல்ஹாசன் வெளியிட்டார்.

SCROLL FOR NEXT