தமிழகம்

கனமழையால் சாலைகளில் வெள்ளம்: சென்னையில் பஸ், ரயில் போக்குவரத்து பாதிப்பு - வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

செய்திப்பிரிவு

கனமழை காரணமாக சென்னை யில் நேற்று பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகளில் ஏற்பட்டுள்ள மேடு, பள்ளங்களால் மாநகர பேருந்து ஓட்டுநர்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிப் பட்டனர்.

கனமழையால் ஜிஎஸ்டி சாலை, வடபழனி - கோயம்பேடு சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, நந்தம்பாக்கம் பூந்தமல்லி சாலை, வேளச்சேரி நெடுஞ்சாலை, மடிப்பாக்கம் சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை ஆகியவை மேடு பள்ளங்களாக காட்சியளித்தன. பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் மாநகர பேருந்து ஓட்டுநர்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிப்பட்டனர்,.

பெருங்களத்தூரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் பாதையில் நேற்று மழையால் கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வெளியூர் செல்லும் பேருந்துகளும், வெளி யூரில் இருந்து சென்னை வரும் பேருந்துகளும் வாகனங்களும் நீண்ட தூரத்துக்கு அணி வகுத்து நின்றன.

வியாசர்பாடி ஜீவா அருகே உள்ள சுரங்கப்பாதையில் சூழ்ந் திருந்த வெள்ளத்தில் ‘45 ஜி’ பேருந்து சிக்கிக்கொண்டது. அங்கிருந்த பொதுமக்கள் அந்த பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதேபோல் சென்னையின் பல்வேறு சுரங்கப் பாதைகளிலும் வெள்ளம் காரணமாக பேருந்துகள் சிக்கிக்கொண்டன.

வியாசர்பாடி, எம்கேபி நகர், அம்பத்தூர், வில்லிவாக்கம், வண்ணாரப்பேட்டை, திருவொற்றி யூர், எண்ணூர், மாதாவரம், கொருக் குப்பேட்டை, பிராட்வே, தி.நகர், திருவான்மியூர், வேளச்சேரி, விஜய நகர், மடிப்பாக்கம், தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலை யங்களில் மழைநீர் தேங்கி இருந்தன. சாலைகள் சேதமாகி இருந்ததால் வாகனங்கள் மெது வாக ஊர்ந்து சென்றன. பல இடங் களில் பேருந்துகள் பழுதாகி நின்றன.

இது தொடர்பாக தொமுச பொரு ளாளர் கி.நடராஜன் மற்றும் ஏஐடியுசி போக்குவரத்து சம்மேளன பொதுச் செயலாளர் ஜெ.லெட்சுமணன் ஆகியோர் கூறியதாவது:

உதிரிபொருட்கள் பற்றாக்குறை யால் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின் றனர். தற்போது பெய்த கனமழை யால் பெரும்பாலான சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. பெரும்பாலான பேருந்துகளில் கண்ணாடிகளை துடைக்கும் வைப் பர்கள் கூட, சரியாக இயங்கா ததால் ஓட்டுநர்கள் நிம்மதியாக பேருந்துகளை ஓட்ட முடியவில்லை.பணிமனையில் மழைநீர் புகுவ தால், பேருந்துகள் உள்ளே செல்ல சிரமமாக உள்ளது என்றனர்.

விரைவு ரயில்கள் தாமதம்

தாம்பரம், கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் தண்டாவளங்கள் மழை நீரில் முழ்கின. இதனால், வெளியூரில் இருந்து வரும் விரைவு ரயில்கள் காலதாமதமாக சென்னையை வந்தடைந்தன. கம்பன், பாண்டியன், மன்னை, சேது ஆகிய விரைவு ரயில்கள் 30 நிமிடங்கள் தாமதமாக எழும்பூர் வந்தடைந்தன. ராமேஸ்வரம், பொதிகை ஆகிய விரைவு ரயில்கள் 20 நிமிடங்களும், கன்னியாகுமரி, நெல்லை விரைவு ரயில்கள் ஒரு மணிநேரம் தாமதமாகவும் வந்தன. இதேபோல் காலை 9.30 முதல் 10.30 மணி வரையில் மின் ரயில்களை முழு அளவில் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. குறைந்த வேகத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன.

SCROLL FOR NEXT