தமிழ்நாடு கோயில் பூசாரிகள் நலச் சங்கத்தின் மாவட்ட மாநாடு, சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.வாசு தலைமையில் கோவை சின்னியம்பாளையத்தில் நேற்று நடைபெற்றது. மாநிலச் செயலர் எஸ்.சங்கர், பொருளாளர் கே.சுந்தரம், துணைத் தலைவர் டி.கணேசன், மாவட்டத் தலைவர் மணி (எ) நடராஜன், பொருளாளர் சண்முகசுந்தரம், செயலர் எஸ்.நரேஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் கே.அல்லிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
எங்களது நீண்டகால கோரிக்கையான, பூசாரிகளுக்கான ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாகவும், வருமான உச்சரவரம்பை ரூ.72 ஆயிரமாகவும் உயர்த்தியதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
கிராமப்புற கோயில்களில் பணியாற்றி வரும் பூசாரிகள் வருவாய் இன்றி தவித்து வருகின்றனர். எனவே, கிராமப்புற பூசாரிகளுக்கு மாத ஊதியம், வயது முதிர்ந்த பூசாரிகளுக்கு ஓய்வூதியம், வீடு இல்லாத பூசாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்ட கட்ட நிதியுதவி போன்ற திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் சுமார் 40 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதில் பெரிய கோயில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு மட்டும் பணி நிரந்தரம், மாதம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் பணியாற்றும் பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு மாத ஊதியம் இல்லை. எனவே, அதற்குரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். மேலும், 4 ஆயிரம் பூசாரிகளுக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
இதனால், ஒரு பூசாரி மறைந்தால் மட்டுமே, மற்றொரு பூசாரி ஓய்வூதியம் பெறும் நிலை உள்ளது. எனவே, ஓய்வூதியம் பெறும் பூசாரிகளின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 19 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த மாநாட்டில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பூசாரிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.