சென்னை மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள இ-பைக் மற்றும் அடுத்த தலைமுறை சைக்கிள் பற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற இ-பைக்: உடல் வியர்க்காமல் கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்ல முடியும்

செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சி சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ-பைக், பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இனி உடல் வியர்க்காமல் சைக்கிளில் கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்ல முடியும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் இ-பைக் மற்றும் அடுத்த தலைமுறை சைக்கிள் என புதிய வகைசைக்கிள்களை கடந்த வாரம் முதல்வர் பழனிசாமி அறிமுகப்படுத்தினார்.

இந்த புதிய வகை சைக்கிள்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சைக்கிள் பயணம் நேற்று தொடங்கியது. அதை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தொடங்கி வைத்தார்.பின்னர் அவரும் சைக்கிள் ஓட்டினார். சைக்கிள் பயணத்தின்முடிவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னை மாநகரப் பகுதியில் பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டை குறைக்கவும், இளைய தலைமுறையினரிடையே சைக்கிள்பயன்பாடு மீதான ஆர்வத்தை அதிகரிக்கவும் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்மார்ட் சைக்கிள் திட்டம் தொடங்கப்பட்டது. சுமார் 100 இடங்களில் சைக்கிள் நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1,500 சைக்கிள்கள் பயன்பாட்டில் உள்ளன. அடுத்த4 மாதங்களில் 500 மையங்களாக அதிகரிக்கவும், அவற்றில் 5 ஆயிரம்சைக்கிள்களை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது புதிய வகை சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே, இந்த சைக்கிள் பயணம் மேற்கொள்ளப்பட்டது. சைக்கிள்களை பயன்படுத்தும்பொது, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

இ-பைக்கின் வாடகை, முதல் 10 நிமிடங்களுக்கு ரூ.10. அதன் பிறகு ஒவ்வொரு நிமிடத்துக்கும் ரூ.1. அடுத்த தலைமுறை சைக்கிள்களுக்கான வாடகை முதல்1 மணிநேரத்துக்கு ரூ.5.50, அடுத்த அரை மணி நேரத்துக்கு ரூ.9.90 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜிஎஸ்டி வரியும் உண்டு.

சைக்கிள் பயணத்தில் பங்கேற்ற பொதுமக்கள் கூறியதாவது: இதற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட சைக்கிள்களையும் நாங்கள் ஓட்டிஇருக்கிறோம். அது வழக்கமான சைக்கிள் போலவே இருந்தது. பாலங்கள் போன்ற மேடான பகுதிகளில் ஏறும்போது சிரமமாக இருந்தது. சில கிமீ தூரம் சென்றாலே உடல் வியர்த்து, உடை நனைந்து,துர்நாற்றம் வீசத் தொடங்கிவிடுகிறது. அதனால் சைக்கிளை தொடர்ந்து பயன்படுத்தவில்லை.

தற்போது இ-பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை கடந்த சில நாட்களாக ஓட்டி வருகிறோம். இதில் களைப்பு தெரியவில்லை. உடல் வியர்க்கவில்லை. அதனால் இந்த இ-பைக்கை தொடர்ந்துபயன்படுத்தவும், சைக்கிளிலேயேகல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லவும் திட்டமிட்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT