தமிழகம்

ஜனவரியில் அதிகமாக மழை பெய்தும் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது

செய்திப்பிரிவு

சென்னையில் கடந்த ஜனவரி மாதம் வழக்கத்தைவிட சுமார் 9 மடங்கு அதிகமாக மழை பெய்தும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.

சென்னையில் ஜனவரி மாதத்தில் வழக்கமாக 22 மிமீ மழை பதிவாகும். ஆனால் கடந்த மாதம் 194 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக வேளச்சேரி, ராம்நகர், சாந்தோம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, புளியந்தோப்பு, பெரும்பாக்கம், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது.

கடந்த நவம்பர் மாதம் வழக்கத்தைவிட மழை குறைவாக பெய்த நிலையில், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருந்தது. ஆனால் அதிக கனமழை கொட்டித் தீர்த்த ஜனவரி மாதத்தில், டிசம்பர் மாத நிலத்தடிநீர் மட்ட அளவை விட குறைந்திருப்பது மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 0.88 மீட்டர் ஆழத்துக்கு நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, நிலத்தடி நீர்மட்டம் குறைந்திருப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்படும் என்றனர். சென்னை குடிநீர் வாரியத்திடம் கேட்டபோது, “கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடும்போது நீர்மட்டம் உயர்ந்தே இருக்கிறது” என்றனர். அவ்வாறு ஒப்பிடும்போது, திரு.வி.க.நகர், ஆலந்தூர், அடையார் ஆகிய மண்டலங்களில் சுமார் 2 மீட்டர் அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

          
SCROLL FOR NEXT