விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையைப் பொருட்படுத்தாமல், தங்களது கோரிக்கைகளுக்காக திருச்சியில் 6-வது நாளான இன்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
"பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகங்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவித்து அதற்கான ஊதியத்தை வழங்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஊழியர்களுக்கு ரூ.50 லட்சமும், கரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்க வேண்டும்.
கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்ட அனைத்துத் துறை ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.2-ம் தேதி தொடங்கி தினமும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர்.
இந்தநிலையில், வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையைப் பொருட்படுத்தாமல், 6-வது நாளாக இன்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"விடுமுறை நாளிலும் விடியலை நோக்கி" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இன்றைய போராட்டத்துக்கு தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் நவநீதன் தலைமை வகித்தார்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் நெற்றியில் நாமமிட்டு, கையில் சட்டியேந்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 22 பெண்கள் உட்பட 48 பேரை போலீஸார் கைது செய்தனர்.