தமிழக அரசு அறிவித்துள்ள பயிர்க்கடன் அதிமுகவினருக்கு மட்டுமே பயன் தரும் என்றும் விவசாயிகளுக்கு பயன் தராது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் சுரண்டை சாலையில் உள்ள அண்ணா திடலில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
மேலும், சிலரது கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்த ஸ்டாலின், அனைத்து கோரிக்கைகளையும் ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
பின்னர் அவர் உரையாற்றும்போது, “முதல்வர் பழனிசாமி கடைசி நேரத்திலும் தனது நாடகங்களை நடத்தி வருகிறார். விவசாயிகளை ஏமாற்றி வருகிறார். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை திமுக ஆட்சி அமைந்ததும் ரத்து செய்வோம் என தொடர்ந்து நான் கூறினேன்.
உடனே, முதல்வர் பழனிசாமி கூட்டுறவு கடனை ரத்து செய்வதாக அறிவித்தார். அவர் இன்றும் ரத்து செய்யவில்லை. அறிவிப்பு மட்டுமே செய்துள்ளார்.
10 ஆண்டு கால அதிமுக ஆட்சி இன்னும் 3 மாதத்தில் முடியப் போகும் நிலையில் கடனை ரத்து செய்வதாக பழனிசாமி அறிவித்துள்ளார். விவவாயிகள் படும் வேதனை இப்போதுதான் அவருக்கு தெரிந்ததா?.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதாக 2016-ம் ஆண்டும் இதேபோல் ஒரு நாடகத்தை நடத்தினார்கள். 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் பயிர்க் கடன் தள்ளுபடி செய்வோம் என்று கூறினார்கள்.
இதை எதிர்த்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடனை ரத்து செய்யக் கோரி பொதுநல வழக்கு தொடர்நதனர்.
இதை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்றுக்கொண்டு, அனைத்து விவசாயிகளுக்கும் சலுகை வழங்கும் வகையில் அரசாணையை மாற்றி உத்தரவிட நீதிமன்றம் ஆணையிட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த துரோக அரசுதான் பழனிசாமி அரசு. வழக்கு நடக்கும்போதே விவசாயிகளுக்கு நெருக்கடி தந்து கடனை வசூலித்தது. ஆனால் இப்போது கடனை ரத்து செய்வதாக அறிவித்திருப்பது தேர்தலுக்காக மட்டுமே.
இந்த பச்சைத் துரோக நாடகங்களை அறியாதவர்களல்ல தமிழ்நாட்டு மக்கள். கடந்த 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது தமிழகத்தில் சிறு, குறு, பெரிய விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற நகைக்கடன், பயிர்க்கடன், டிராக்டர் கடன், கிணறு வெட்டுவதற்கான வாங்கிய கடன் உள்ளிட்ட 7 ஆயிரம் கோடி அனைத்து விவசாய கடன்களையும் ரத்து செய்தார் கருணாநிதி. ஆனால் இப்போது முதல்வர் அறிவித்திருப்பது வெறும் பயிர்க்கடன் மட்டுமே. இதுவும் சிறு, குறு விவசாயிகளுக்கான கடனாக உள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் நிர்வாகத்தில் அதிமுகவினர் உள்ளதால் அவர்களது உறவினர்கள் பெயரில் பயிர்க்கடன் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. உண்மையான சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் சாகுபடிக்காக நகைகளை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அடமானம் வைத்துள்ளனர்.
அந்த கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி அதிமுகவினருக்கு மட்டுமே பயன் தரும். உண்மையான சிறு, குறு, பெரிய விவசாயிகளுக்கு பயன் தராது.
கிசான் திட்டத்தில் போலி விவசாயிகள் ஊடுறுவியதால் கோடிக்கணக்கில் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டது. குடிமராமத்து பணிகளில் அதிமுகவினர் பலர் போலி விவசாய சங்கங்கள் மூலம் டெண்டர் எடுத்து பணிகள் செய்தனர். இதனால் நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படவில்லை. குடிமராமத்து பணிகள் மூலம் கோடிக்கணக்கில் அதிமுகவினர் சுருட்டியதாக விவசாயிகள், பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்ஜிஆரை இளம் வயதில் நான் அறிவேன். என்னை அவரும் நன்கு அறிவார். ஆனால் இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் எம்ஜிஆரை சினிமாவில்தான் பார்த்திருப்பார்கள். எம்ஜிஆரால் பாராட்டப்பட்டவன்தான் இந்த ஸ்டாலின் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
தொகுதி பிரச்சினைகளை பேசாமல் சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணித்துவிட்டு சென்றுவிட்டதாக ஒரு அமைச்சர் எங்களை கேலி பேசியுள்ளார். சட்டப்பேரவையில் நாங்கள் இதுவரை பேசிய தொகுதி பிரச்சினைகள் எல்லாவற்றையும் தீர்த்துவிட்டீர்களா?. ஆளுங்கட்சியினர் தொகுதி பிரச்சினைகளைக் கூட தீர்க்கவில்லை.
அமைச்சர்கள், துணை முதல்வர், முதல்வர் தொகுதியிலும் மக்கள் குறைகளை தீர்க்கவில்லை. தமிழகம் குறைகள் சூழ்ந்த மாநிலமாக உள்ளது. மக்கள் கவலைகளை போக்காத ஆட்சியாக மட்டுமில்லாமல் புதிய புதிய கவலைகளை உருவாக்கும் ஆட்சியாக அதிமுக ஆட்சி உள்ளது. இந்த ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவ பத்மநாதன் வரவேற்று பேசினார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் துரை, சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, முன்னாள் அமைச்சர்கள் தங்கவேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஆவுடையப்பன், முன்னாள் எம்எல்ஏ ரசாக், திமுக வர்த்தக அணி துணைத் தலைவர் அய்யாத்துரை பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், “ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேல் கடை கடையாகச் சென்று மாமூல் கேட்டதுபோல் இப்போது அதிமுகவினர் கடை கடையாகச் சென்று மாமூல் பிச்சையெடுக்கின்றனர்.
கரோனாவை பயன்படுத்தி கொள்ளையடித்த ஆட்சிதான் பழனிசாமி ஆட்சி” என்று சாடினார். முன்னதாக பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சாதனையாளர்கள் பலருக்கு மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்.