மக்கள் பணியே என் வாழ்க்கை என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித் துள்ளார்.
தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப் பேற்று ஓராண்டு நிறைவு பெற்ற தையொட்டி அவரது பணிகள், பயணங்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்நூல் வெளியீட்டு விழாவும், பத்திரிகையாளர் களுடன் கலந்துரையாடல் நிகழ் வும் சென்னையில் நேற்று நடந்தது. பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடிய தமிழிசை, நிறைவாக பேசியதாவது:
புகழ்பெற்ற அரசியல் தலைவரின் மகள், புகழ்பெற்ற மருத்துவரின் மனைவி, புகழ்பெற்ற மருத்துவர் என்ற அடையாளத்துடன் அரசியலில் அடியெடுத்து வைத்தேன். என் குடும்பத்தினர் இருந்த அரசியல் கட்சிக்கு நேர்எதிரான கட்சியில் சேர்ந்தேன். இதனால் என் மீது குடும்பத்தினர் கடும் கோபத்தில் இருந்தனர். ஓராண்டுக்கு குடும்ப நிகழ்ச்சி களுக்குகூட என்னை அழைக்கவில்லை. அப்போது எனக்கு உறுதுணையாக இருந்தவர் எனது கணவர் சவுந்தரராஜன்.
பெண்கள் அரசியலில் சாதிப்பது அவ்வளவு எளிதானது அல்ல.பல்வேறு சோதனைகள், அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும். என் அரசியல் வாழ்வில்தூங்காத இரவுகள் அதிகம். அப்போதெல்லாம் எனக்கு தைரியம் ஊட்டியவர் என் கணவர்தான்.
ஆளுநர் ஆவேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆண்டவன் நினைக்காமல் வாழ்வில் ஒரு நொடிகூட நகராது என்பதுஎன் நம்பிக்கை. ஆண்டவரும், ஆள்பவர்களும் எனக்களித்த ஆளுநர் பணியை திறம்பட செய்திருக்கிறேன். மக்கள் பணியே என் வாழ்க்கை. அதை உணர்ந்துதான் அரசியலுக்கு வந்தேன். ஆளுநராகவும் மக்களுடனேயே இருக்கிறேன். அவர்களுக்காக பணியாற்றுகிறேன். மக்களுக்காக பணியாற்றுவதுதான் என் வாழ்க்கை.
அடுத்த நாளை பற்றி நான் கவலைப்படுவதில்லை. இன்று எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்வதுதான் எனது வழக்கம்.
இவ்வாறு தமிழிசை பேசினார்.