தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் சரணடைந்த இளைஞரின் மனைவி மரணமடைந்தார்.
ஏரல் அருகேயுள்ள தீப்பாச்சி கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் மகன் முருகவேல்(39). இவர் கடந்த 31-ம் தேதி இரவு மதுபோதையில் தகராறு செய்ததால், காவல் உதவி ஆய்வாளர் பாலு(55) எச்சரித்துள்ளார். ஆத்திரத்தில் எஸ்ஐ பாலு மற்றும் தலைமைக் காவலர் பொன் சுப்பையா ஆகியோர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேனை ஓட்டி வந்து மோதினார் முருகவேல். இதில், எஸ்ஐ பாலு உயிரிழந்தார்.
விளாத்திகுளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் முருகவேல் சரண் அடைந்தார். பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
ஏற்கெனவே, முருகவேல் மதுபானம் அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்ததால், அவரது மனைவி செல்வலெட்சுமி(28) கடந்த 30-ம் தேதி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஏரல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சமீபத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டில் இருந்த செல்வலெட்சுமிக்கு மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். முருகவேல், செல்வலெட்சுமி தம்பதிக்கு 7 வயதில் மகனும், 3 வயதில் மகளும் உள்ளனர்.