தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்லும் மக்களால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் நேற்று 3-வது நாளாக கூட்டம் அலைமோதியது. மழை காரணமாக சிறப்புப் பேருந்துகளை குறிப்பிட்ட நேரத்தில் இயக்க முடியாததால் பயணிகள் அவதிப்பட்டனர்.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வேண்டும் என்பதற்காக சென்னையில் வசிக்கும் பலர், தங்கள் ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் கடந்த 3 நாட்களாக பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சென்னையின் பல பகுதிகளில் நேற்று காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்தது. கொட்டும் மழையிலும் மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று மாலை 4 மணிக்குமேல் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் சிறப்புப் பேருந்துகளை பேருந்து நிலையத்தின் உள்ளே கொண்டு வந்து இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் காரணமாக முன்பதிவு செய்த சிறப்புப் பேருந்துகள் அறிவிக்கப்பட்ட நேரங்களில் இயக்கப்படவில்லை. சுமார் 45 நிமிடங்கள் வரை தாமதமாகவே இயக்கப்பட்டன. மாலை 6 மணிக்கு பிறகு, கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு உள்ளே செல்லவும், வெளியே வரவும் சுமார் ஒரு மணி நேரம் ஆனது. நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்ற வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் உள்ள முக்கியமான சாலைகளை கடந்து புறநகர் பகுதிக்கு செல்லவே சுமார் 3 மணி நேரம் ஆனது. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிப்பட்டனர்.
பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து பல இடங்களுக்கு நேற்று மொத்தம் 825 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று கூட்டம் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதால் 1,194 சிறப்புப் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல்,எழும்பூர் ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இடம் பிடிக்க பயணிகள் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்தனர். டிக்கெட் உறுதியாகாத பயணிகள், அவற்றை ரத்து செய்துவிட்டு ஆம்னி பேருந்துகளில் சென்றனர்.
கூட்ட நெரிசல் காரணமாக ரயில் நிலையங்களிலும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் மாநில போலீஸார், ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.