சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள் ளதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள் ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நுழைந்து தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பியது, நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம், பதாகைகள் வைத்தது உள்ளிட்ட தொடர் சம்பவங்களின் எதிரொலியாக உயர் நீதிமன்ற பாதுகாப்பு குறித்த வழக்கு ஒன்று தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்கப்பட்டது.
‘சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு 650 சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்பு தேவை. அதற்கு 6 மாதங்களுக்கு ரூ.16.6 கோடி தேவைப்படும். இந்த செலவுத் தொகையை தமிழக அரசு டெபாசிட் செய்தால் உடனடியாக பாதுகாப்பு அளிக்க தயார்’ என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சோதனை அடிப்படையில் இதை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் அடங்கிய அமர்வு, ‘மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2007-ம் ஆண்டு பிறப்பித்த வழிகாட்டு நெறிகளின்படி, நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்கள் அனைத்தும் உயர் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போதுள்ள பாதுகாப்பு போதாது என்பதை, நடைபெற்று வரும் சம்பவங்கள் நிரூபிக்கின்றன. எனவே, சோதனை அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பை சிஐஎஸ்எப் அமைப்பிடம் 6 மாதங்களுக்கு ஒப்படைக்கலாம். அதற்கான செலவுத் தொகையை 7 நாட்களுக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும். நவம்பர் 15-ம் தேதி முதல் சிஐஎஸ்எப் பொறுப்பேற்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
தமிழக அரசின் வேண்டுகோளையும் நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட சில விஷயங்களையும் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர். சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுள்ள போலீஸ் உதவி கண்காணிப்பாளர் அக்குழு கூட்டத்தில் பேசும்போது, ‘உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் போலீஸா ருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. போலீஸாரை வழக்கறிஞர்கள் தாக்கிய சம்பவங்கள் 10-க்கும் அதிகமாக நடந்துள்ளன. பெண் போலீஸார் பணியில் இருக்கும் போது, வழக்கறிஞர்கள் ஆபாசமாக கேலி செய்கின்றனர்’ என்றெல்லாம் கூறியதையும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.
இந்த உத்தரவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘பாதுகாப்பு அளித்தல் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விஷயம். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் பாதுகாப்பு அளிக்கவும் தயார். சிஐஎஸ்எப் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டால், தேவையற்ற பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது. இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
200 போலீஸார் பாதுகாப்பு
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மத்திய தொழில்படை பாதுகாப்பு வழங்கப்பட்டால், வழக்கறிஞர்களைத் தவிர வேறு யாரும் நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பை தற்போது உதவி கண்காணிப்பாளர் தலைமையில் 200 போலீஸார் கவனித்து வருகின்றனர். இதில் 132 போலீஸார் ஆயுதம் தாங்கியபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, 10 பேர் அடங்கிய சிறப்பு பிரிவு போலீஸாரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது