சென்னையில் மீண்டும் மழை பெய்து வருவதால் பல்வேறு குடி யிருப்புப் பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்கி வருகிறது.
சென்னையில் கடந்த இரு வாரங் களாக பெய்த கனமழையால் பல் வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் போது தற்போது மீண்டும் மழை பெய்து வருவது, மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுமக்கள் மறியல்
வேளச்சேரி காந்திநகர் பகுதி யில் தற்போது பெய்து வரும் மழையால் மீண்டும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் அவதிக்குள்ளான பொதுமக்கள், வேளச்சேரி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி கலைந்துபோகச் செய்தனர்.
இதேபோல் புளியந்தோப்பு ராம சாமி தெரு, மன்னார்சாமி தெரு உள்ளிட்ட பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியுள்ளது. அதை அகற்றக்கோரி புளியந் தோப்பு நெடுஞ்சாலையில் நேற்று மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கழிவுநீர் கலப்பு
வட சென்னையில் திருமுல்லைவாயல், அம்பத்தூர், விநாயகபுரம், கொளத்தூர், பெரம்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள தெருக்களில் மழை நீருடன் கழிவு நீர் கலந்துள்ளது. இதனால் துர்நாற்றமும், கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் பல இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உற்பத்தி பாதிப்பு
அம்பத்தூர் தொழிற்பேட்டை யில் 10 நாட்களுக்கு மேலாகியும் மழை நீர் வடியாததால் பெரும்பாலான தொழிற்சாலைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மின்சாரமும் அப்பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
பஸ் நிலையத்தில் மழைநீர்
திருவான்மியூர் பஸ் நிலையம், எல்.பி.சாலையை ஒட்டிய பகுதிகள், கலாக்ஷேத்ரா காலனி ஆகிய இடங்களில் மழைநீர் படிப்படியாக வடிந்த நிலையில், மீண்டும் மழைநீர் தேங்கியிருப்பது பொதுமக்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
போக்குவரத்து நெரிசல்
தியாகராயநகர் வடக்கு உஸ் மான் சாலையும், ரங்கராஜபுரம் புதிய பாலமும் சந்திக்கும் இடத்தில் கொஞ்சமும் குறையாத மழை நீர் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. வாகனங்கள் ஊர்ந்தே செல்வதால் போக்குவரத்து நெரி சல் ஏற்படுகிறது.
புறநகரில் மழைநீர்
கிழக்கு தாம்பரம் அடுத்த மகா லட்சுமி நகரில் இருந்து சிட்லபாக்கம் செல்லும் சாலை அதனைச் சுற்றி யுள்ள குடியிருப்புகளில் மீண்டும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள் ளனர்.
மேற்கு தாம்பரத்தில் அன்னை அஞ்சுகம் நகர், அம்பேத்கர் புது நகர் மற்றும் முடிச்சூர், பெருங் களத்தூர் பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இப்பகுதியில் சூழ்ந்துள்ள தண்ணீரை அகற்றும் பணியில் தாம்பரம் நகராட்சி பணி யாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கண்டுகொள்ளாத அதிகாரிகள்
திருநின்றவூரில் சிஎம்டிஏ அனு மதி பெற்று முறையாக கட்டப்பட்ட வீடுகள் நிறைந்த அன்னை இந்திரா நகர் பகுதி முழுவதும் இப்போதும் 3 அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இது தொடர்பாக பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள் ளவில்லை என்று கூறப்படுகிறது.
350 பம்பு செட்டுகள்
மழைநீர் தேங்கியுள்ள பகுதி களில் மாநகராட்சி சார்பில் 305 டீசல் பம்பு செட்டுகள், 47 சூப்பர் சக்கர் இயந்திரங்களைக் கொண்டு தொடர்ந்து அகற்றப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.