தமிழகம்

நகைகளை வைத்து விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனும் தள்ளுபடி: அமைச்சர் செல்லூர் ராஜூ

செய்திப்பிரிவு

நகைகளை வைத்து விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று முதல்வர் பழனிசாமி 110-வது விதியின் கீழ், விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்.

கரோனா, புயல் மற்றும் ஜனவரி மழையால் கடும் பாதிப்புக்கு உள்ளான தமிழக விவசாயிகளின் கடன் சுமையை முற்றிலும் குறைத்திடும் விதமாக 16.43 லட்சம் விவசாயிகளின் 12,110 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே நகைகளை வைத்து விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களும் தள்ளுபடி செய்யப்படுமா என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் இதுகுறித்துக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் இன்று நடைபெற்ற பூமி பூஜை நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு பேசிய அவர், ’’கடந்த 10 ஆண்டுகளில் 1 கோடியே 6 லட்சம் விவசாயிகளுக்கு அதிமுக அரசு வட்டியில்லா கடன்களை வழங்கியுள்ளது.

முதல்வர் அறிவிப்பின்படி பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் பத்திரம் வைத்து வாங்கி இருந்தாலும் நகைகளை வைத்து வாங்கி இருந்தாலும் அவர்களுக்குத் தள்ளுபடி உண்டு.

எல்லா அரசு அதிகாரிகளையும் அழைத்துப் பேசி, முதல்வர் தனிப்பட்ட வகையில் எடுத்த முடிவு இது’’ என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

SCROLL FOR NEXT