முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம் 
தமிழகம்

பல்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 12 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி உத்தரவு

செய்திப்பிரிவு

பல்வேறு நிகழ்வுகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 12 நபர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப். 06) வெளியிட்ட அறிக்கை:

"புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், தென்னம்பாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வராசு என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், பாலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியராஜ் என்பவர் மரம் வெட்டும் போது, மின்கம்பியில் மரம் விழுந்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், செவல்குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி மற்றும் வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயராஜ் ஆகிய இருவரும் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் வட்டம், அய்யனார்புரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் குழந்தைகள் பார்கவி மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் தனது வீட்டின் அருகே இருந்த கம்பியை அகற்ற முற்படும் போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், திருச்சிற்றம்பலம் சரகம், களத்தூர் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த பக்கிரியம்மாள் என்பவர் எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் செய்தியையும்;

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், வன்னிவேடு மதுரா தேவதானம் கிராமத்தைச் சேர்ந்த வசந்த் என்பவர், எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், பெருங்காலூர் கிராமத்தைச் சேர்ந்த சத்தியசீலன் என்பவர் மின்கசிவினால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்; அவரை காப்பாற்ற சென்ற, அதே கிராமத்தைச் சேர்ந்த பாலுசாமி என்பவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், குகையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர் மின்மாற்றியின் அருகில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், பூக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவகாமி என்பவர் அவருடைய தந்தை வீட்டில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

பல்வேறு நிகழ்வுகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 12 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 12 நபர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT